துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தென்காசி பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப நண்பரின் வீட்டிற்கு வந்த போது, அவரின் மகளுக்கு நீலகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, யாரிடமும் சொல்லக் கூடாது என்று துப்பாக்கியை வைத்து மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீப காலங்களாக பள்ளி மாணவிகள், குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்கு எதிராக நடந்து வரும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் 15 வயதான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அதனை யாரிடம் சொல்லக் கூடாது என்று துப்பாக்கியை வைத்து பாஜக நிர்வாகி மிரட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இது தென்காசி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன். இவர் 2023ஆம் ஆண்டு தனது குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குடும்ப நண்பரிடன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்த பின், இந்த விஷயம் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று துப்பாக்கியை வைத்து மிரட்டி இருக்கிறார். இருந்தாலும் 15 வயது சிறுமி இந்த விவகாரம் தொடர்பாக தனது தந்தையிடம் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு சென்று நீலகண்டன் மீது புகார் அளித்துள்ளார்.
ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உடனடியாக வழக்குப்பதிவு செய்யக் கோரி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக நிர்வாகி நீலகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டிலேயே புகார் அளித்த போது, காவல்துறையினர் ஏன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு மட்டுமல்லாமல், யாரிடமும் சொல்லக் கூடாது என்று துப்பாக்கியை வைத்து நீலகண்டன் மிரட்டி இருக்கும் சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications