நெல்லை ஜாகிர் உசேன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. மகன் வெளியிட்ட வீடியோவால் பரபர!
நெல்லை: நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தன் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என ஜாகீர் உசேனின் மகன் வீடியோ வெளியிட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பித்தார் நெல்லை காவல் ஆணையர்.
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). காவல்துறையில் எஸ்.ஐ ஆக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். இவர் கடந்த 18 ஆம் தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்ற தௌபிக், அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. டவுனில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவனையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், "மர்ம நபர்களால் நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். இன்று ஹெல்மெட் அணிந்து வந்த நபர் எங்களது வீட்டை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த டார்கெட் நான் தானா என எண்ண தோன்றுகிறது. சாவை நினைத்து நாங்கள் பயப்படவில்லை, அதற்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தே பயப்படுகிறோம்.
உடலை வாங்க மாட்டோம் என நிபந்தனை விதித்ததாலேயே முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார்கள். உதவி ஆணையாளர் செந்தில்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு நாமக்கலில் பணிபுரியும் போது இது போன்று ஒரு நபர் மீது பிசிஆர் வழக்கு தொடர்ந்து அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே வேலையை அவர் செய்து வருகிறார். காவல்துறையில் ஒரு சில அதிகாரிகள் இன்றும் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதனால் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது" எனக் கூறியுள்ளார்.
ஜாகிர் உசேன் மகன் வீடியோ வெளியிட்டுள்ளதை தொடர்ந்து, ஜாகிர் உசேனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, 2 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி, ஜாகிர் உசேன் வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், ஜாகீர் உசேன் முதல்வரின் பார்வைக்கு எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், 'என்னை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு சுற்றி வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சூழலில் தான் ஜாகிர் உசேன் மகன் வீடியோ வெளியிட்ட நிலையில், அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications