சென்னை, திருவள்ளூர் விடுங்க.. திருநெல்வேலி, தூத்துக்குடியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை! லிஸ்ட் இதோ
திருநெல்வேலி: கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. குறிப்பாக கோவையில் மட்டும் 10.7 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. தூத்துக்குடியில் காலை கனமழை பெய்திருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. மழை வெள்ளம் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். மழை நின்ற பின்னர்தான் வெள்ளம் வடியும் என்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
எனவே திண்டுக்கல், திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் பூங்கொடி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர புயல் கனமழை பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டன. இந்த மாவட்டங்கள் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மாணவர்களின் பாட புத்தகங்கள் மழைநீரில் நனைந்திருக்கின்றன. அதேபோல பள்ளி கட்டிடங்களும் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்றும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது, இன்று சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தப்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மழைநீரை அகற்றவும், மரம் விழுந்தது, ஓடுகள் சேதம், மின் இணைப்பு பாதிப்புகள் ஆகியவற்றை சரி செய்யவும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த தொகை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் என பிரித்து வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications