நெல்லை பள்ளி மாணவர் தற்கொலை சம்பவம்! ட்விஸ்ட்! பேருந்துகளுக்கு தீவைத்த இருவர் கைது!
நெல்லை: நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், ஆத்திரமடைந்த சிலர் அவர் படித்த தனியார் பள்ளியின் பேருந்துகளைத் தீவைத்து எரித்தனர். இந்த விவகாரத்தில் திடுக் சம்பவமாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி சங்கரகுமாரின் மகன் சபரிகண்ணன் (15). இவர் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஜூலை 4-ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாணவர் சபரிகண்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், அதற்காக ஆசிரியர்கள் அவரைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை கண்டித்ததால் மனமுடைந்த சபரிகண்ணன், ஜூலை 7-ம் தேதி வீட்டில் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்ததாகத் தெரிகிறது.
பள்ளியின் வாகனத்திலேயே சபரிகண்ணன் மயங்கி விழுந்ததைக் கண்ட பள்ளி நிர்வாகம், அவரை உடனடியாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் உடல்நிலை மோசமடையவே, மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் தேதி சபரிகண்ணன் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவரின் மரணத்தால் ஆத்திரமடைந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள், சபரிகண்ணனின் உடலுடன் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அங்கு நெல்லை-அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும், காவல்துறையைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி ஆசிரியர், தலைமையாசிரியர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு மாணவரின் உறவினர்களில் சிலர், சபரிகண்ணன் படித்த தனியார் பள்ளியின் இரண்டு பேருந்துகளுக்குத் தீ வைத்ததாகக் கூறப்பட்டது. இதில் பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களான அருண்குமார் (18), ஹரிஹரன் (18) ஆகியோர்தான் தீ வைத்து எரித்ததாக போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். எதற்காக தீ வைத்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications