இல்லாத சரஸ்வதி நதியை தேடுகிறார்கள்! பொருநை அருங்காட்சியகத்தை பாருங்க! மோடிக்கு ஸ்டாலின் அழைப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருநை அருங்காட்சியகத்தை, பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "ஈராயிரம் கால சண்டை இது; இல்லாத சரஸ்வதி நதியை தேடுகிறார்கள். இல்லாத சரஸ்வதி நதியை தேடுகிறார்கள்; கண் முன் இருக்கும் ஆதாரத்தை நம்ப மறுக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

அறிவியல் நிரூபணம்
மேலும் அவர் பேசியதாவது, "நான் இன்று இங்கு மகிழ்ச்சியாக மட்டுமல்ல பெருமையாகவும் நின்றுக்கொண்டிருக்கிறேன். நேற்று பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததுதான் அதற்கு காரணம். பொருநை, தமிழருடைய பெருமை. இந்திய துணை கண்டத்தின் வரலாறு, தமிழ் நிலத்திலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம்முடைய வாதத்துக்கான சான்றுகளை, அறிவியல் பூர்வமாக நாம் நிறுவி இருக்கிறோம்.
காலப்பயணம்
நாம ஏன் கீழடி, பொருநை என நமது வரலாற்றுத் தரவுகளை தொடர்ந்து உரக்க பேசிட்டு இருக்கோம்? தமிழர்களான நம்முடைய பண்பாடு தனித்துவமானது, முற்போக்கானது, இந்திய துணை கண்டத்துடன் நாகரிகத்தினுடைய தொட்டிலாகவும், உச்சமாகவும் இருந்தது நம்முடைய தமிழ் மாநிலம்தான். அதற்கு பல இலக்கிய சான்றுகள் இருக்கிறது. ஆனால், இலக்கியம் மட்டுமே ஒருபோதும் வரலாற்று சான்றாகாது. எனவே அதை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கவும், தொல்லியல் சான்றுகளை சேகரிக்கவும் நாம் மேற்கொள்ளக்கூடிய காலப்பயணம்தான் அகழாய்வுகள்.
உறுதியான போராட்டம்
இந்த நிலையில்தான் கீழடி தொடங்கி, பல வரலாற்று இடங்களில் நாம் மேற்கொண்டு வரும் அகழாய்வுகளுக்கு ஒன்றிய பாஜக அரசு எப்படி எல்லாம் தடை போடுறாங்கன்னு தொடர்ந்து அம்பலப்படுத்தி இருக்கிறோம். அவங்களுடைய எண்ணம் என்ன? தமிழர்களுடைய வரலாற்றுத் தொன்மையை நிரூபிக்க கூடிய ஆய்வுகள் எதுவும் நடக்க கூடாது. மீறி நடந்தாலும், அந்த ஆய்வு முடிவுகள் வெளியிலே வந்துவிடக்கூடாது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட, தமிழ் மீதும், தமிழகம் மீதும் வெறுப்போடு செயல்படுகிறவர்களை எதிர்த்துதான் நாம இன்றைக்கு உறுதியோடு போராடிட்டு இருக்கிறோம்.
ஈராயிரம் ஆண்டுகால சண்டை
இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடி அலைகிறவங்களுக்கு, கண் முன்னே நாம் வெளியிடுகிற ஆய்வுகள் தெரிவதில்லை. அதற்காக சோர்ந்துவிட முடியுமா? நம்முடைய கடமைகளில் இருந்து பின் வாங்கிவிட முடியுமா? வரலாற்றை விட்டுக்கொடுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது. ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது. இதில் நாம் தோற்க மாட்டோம். தொடர்ந்து அடுக்கடுக்கான சான்றுகளை வெளியிட்டு கொண்டே இருக்கிறோம். சான்றுகளை ஆய்வறிக்கையாக வெளியிட்டால் மட்டும் போதுமா? அறிவு தளத்தில் போராடினால் மட்டும் போதுமா?
தமிழனாக பெருமை
அதையெல்லாம் மக்கள் மன்றத்திலே கொண்டுவந்து வைத்து, இன்றைக்கு அந்த பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்துக் கொண்டிருக்கிறோம். 13 ஏக்கர் நிலப்பரப்பில், 54,294 சதுர அடி பரப்பளவில் பொருநை அருங்காட்சியக அரங்கத்தை நான் திறந்து வைத்தேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக, திமுக தலைவராக மட்டுமல்ல.. ஒரு தமிழனாகவும் நான் இன்றைக்கு பெருமைப்படுகிறேன்.
இந்த நேரத்தில் உங்களிடம் உரிமையாக ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும், குடும்பத்துடன் சென்று இந்த அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும்.
மத்திய அரசின் நிதி
இந்த நேரத்துல இன்னொரு விஷயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்க அறிவிப்பு வந்தது. அந்த பணிகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? இன்னும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. ஆனால், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக சிவகளை உள்ளிட்ட அகழ்வாய்வுகளை மேற்கொண்டு, உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம்.
பிரதமருக்கு அழைப்பு
அதனால் இந்த நேரத்தில், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டில் கட்டியிருக்கும் பொருநை மற்றும் கீழடி அருங்காட்சியகத்தை வந்து பார்க்கணும். இந்த கூட்டத்தின் மூலமாக இந்த விழாவின் மூலமாக நான் அன்போடு அவர்கள் அழைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications