லியோ இசை வெளியிட்டு விழா நடைபெறாததால் 2 நாட்களாக சாப்பிடவில்லை.. விஜய் ரசிகை பேட்டி
திருநெல்வேலி: லியோ இசை வெளியிட்டு விழா நடைபெறாததால் இரண்டு நாட்களாக தான் சாப்பிடவில்லை என்று விஜய் ரசிகை தஞ்சாவூர் கோமதி கூறியுள்ளார். இதனிடையே லியோ டிரைய்லரை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காக தஞ்சையில் இருந்து திருநெல்வேலி வந்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்தாக நடிகர் விஜய்யை வைத்து எடுத்துள்ள படம் தான் லியோ. சைக்கோ திரில்லர் படமான 'லியோ' வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் உடன் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ஆக்சன் கிங் அர்ஜுன், நடிகை பிரியா ஆனந்த், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ்மேனன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

லியோ படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் 'நான் ரெடியா' என்ற பாடலை விஜய் பாடி உள்ளார். இதுதவிர சில பாடல்களும் உள்ளன. பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
முன்னதாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வந்தது . ஆனால், கடைசி நேரத்தில் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக விழா ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து லியோ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. ஒவ்வொரு முறை விஜய் பட டிரெய்லர் வெளியானாலும், ரசிகர்கள் தியேட்டரில் போய் ஆரவாரத்துடன் வரவேற்பது வழக்கம், அந்த வகையில் சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்யப்பட்டது. ஆனால் தியேட்டரில் உள்ள சேர்கள் சல்லி சல்லியாக நொறுங்கிப்போனது. ஆனால் திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் அப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை. அமைதியான முறையில் டிரெய்லரை பார்த்து சென்றனர்.
தியேட்டர் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. டிரெய்லர் வெளியாகும் முன்பு ரசிகர்கள் விஜய்யின் பிரம்மாண்ட முறையில் பேனரில் பாலபிஷேகம் செய்தனர் . மேலும் கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். டிரெய்லரை காண ரசிகர்கள் பலர் வெளியூர்களில் இருந்தும் வந்திருந்தனர்.
குறிப்பாக தஞ்சாவூரில் இருந்து தளபதி கோமதி என்பவர் இந்த ட்ரெய்லரை பார்ப்பதற்காக திருநெல்வேலி வந்திருந்தார்.
இது தொடர்பாக கோமதி தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எங்க ஊரில் எல்லாம் லியோ டிரெய்லரை இப்படி தியேட்டரில் ஓட்ட மாட்டார்கள். மால் கட்டுவதற்காக தியேட்டரை இடித்துக் கட்டுகிறார்கள். ஒரு வாரம் டைம் கேட்டார்கள். பசங்க முடியாது என்று கூறி விட்டார்கள். இதையடுத்து லியோ ட்ரெய்லரை பார்க்க விரும்பிய நாங்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து திருநெல்வேலி வந்தோம்.. நான் தளபதியோட தீவிர ரசிகை, தளபதியோட மன்றத்தில் இருக்கிறேன்..
தஞ்சையில் மாநகர தலைவி நானு.. தளபதியை 3 முறை நான் பார்த்திருக்கிறேன்.. தளபதியோட தோலில் கைவைத்து போட்டோ எடுத்திருக்கிறேன்.. அண்மையில் நடந்த மகளிர் அணி மீட்டிங்கிற்கும் போய் இருந்தேன்.. தளபதியை பார்க்க முடியவில்லை என்று கவலை இருந்தாலும், தளபதிக்காக வாழ்கிறோம் என்ற பெருமை இருக்கு எனக்கு.. எல்லா ரசிகர்களுக்காகவும், திரையுலகினருக்காகவும், லியோ வெற்றிகரமாக ஓட வேண்டும் என்று என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். லியோ இசை வெளியிட்டு விழா நடக்காததால் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை " இவ்வாறு கோமதி பிரபல தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications