"1 ரூபா கூட இல்ல, இதுல கேமரா வேறயா".. இனியாவது காசு வைங்க ப்ளீஸ்.. வீட்டு ஓனருக்கு திருடன் கடிதம்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் திருடச் சென்ற இடத்தில் நகை, பணம் என எதுவும் சிக்காததால் கடுப்பான திருடன் கடும் மன உளைச்சலுடன் வீட்டின் ஓனருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ள விநோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
அன்று முதல் இன்று வரை திருட்டு என்பது வித்தியாச வித்தியாசமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. கோழித் திருட்டு, ஆடு திருட்டு, சைக்கிள் திருட்டு, பிக்பாக்கெட், ஆன்லைன் திருட்டு, ஆஃப்லைன் திருட்டு என டிசைன் டிசைனாக காலத்திற்கேற்ப திருட்டுகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆளில்லாத வீடுகளுக்குள் புகுந்து திருடிச் செல்பவர்களும் உண்டு, ஆட்கள் இருக்கும்போதே நேக்காக திருடிச் செல்பவர்களும் உண்டு.

அதிலும் இப்போது திருடிவிட்டு ஓனருக்கு மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதும் சம்பவங்கள் தான் டிரெண்டிங். அந்த வகையில், நெல்லையில் ஒரு சுவாரஸ்ய திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பழைய பேட்டை பகுதியில் ஜேம்ஸ் பால் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மகளைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் மதுரைக்குச் சென்றுள்ளார்.
வீட்டில் யாருமில்லாததை தெரிந்து கொண்ட திருடன் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம், நகையை திருடுவதற்காகச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த பீரோவை உடைத்த திருடன் அதிலிருந்த துணிகளை எல்லாம் எடுத்து உதறிப் பார்த்தும் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லை. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேடியும் எந்தவொரு நகையோ, பணமோ சிக்காததால் திருடன் கடும் மன உளைச்சலாகி இருக்கிறார். அங்கிருந்த ஒரு உண்டியலில் மட்டும் ரூ. 1,000 இருந்ததாக கூறப்படுகிறது.
கஷ்டப்பட்டு பூட்டை உடைத்து திருட வந்த இடத்தில் ஒன்றுமே இல்லை என்பதால் மன உளைச்சலான திருடன், கடும் கோபத்தில் வீட்டின் ஓனருக்கு 4 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
அந்த கடிதத்தில், "வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. அப்புறம் எதுக்கு இத்தனை கேமரா இருக்கு. அடுத்த தடவை என்ன மாதிரி யாரும் திருட வந்து ஏமாற வேண்டாம். தயவு செய்து பணம் வைக்கவும். போங்கடா வெண்ணைங்களா.. என்னை மன்னிச்சுருங்க" என கூறி விட்டு வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கை எடுத்து சென்றுள்ளான். இச்சம்பவம் தொடர்பாக ஜேம்ஸ் பால் அளித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications