நெல்லை தெருவில் நள்ளிரவில் யார் இது? பைக் சைடு லாக்கை உடைக்க பட்ட பாடு இருக்கே? காட்டி தந்த சிசிடிவி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பகுதியில், நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், பைக் பூட்டை உடைக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. நைட் நேரத்தில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வண்டிகளை நோட்டமிட்டு வரும் இந்த நபரின் தொடர் நடமாட்டத்தால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.. தங்கள் வாகனங்களை இரவு நேரத்தில் எங்கே நிறுத்துவது என்றும் குழப்பமடைந்துள்ளனர்..!!
திருநெல்வேலி மாநகர பகுதியில், அதுவும் மக்கள் நடமாட்டம் மிகுந்த செயின்ட் பால்ஸ் சாலை மேற்கு மற்றும் அப்பாசாமி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது அப்பகுதி மக்களை கதி கலங்க வைத்து வருகிறது.

திருநெல்வேலி பைக் திருட்டு
சமீப காலமாகவே, தொடர் திருட்டுகள் மேற்கண்ட பகுதிகளில் நடந்து வரும் நிலையில், இந்த திருட்டில் ஈடுபடுவது யார் என்று தெரியாமல் பொதுமக்களும் குழம்பி தவித்து வந்துள்ளனர்.. எனினும், நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிவதையும், வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு வருவதையும் ஒருசிலர் பார்த்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், , சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சைடு லாக்கை உடைக்க, மர்ம நபர் ஒருவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.. இது அந்த அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.. நள்ளிரவு நேரத்தில் அந்த நபர், அதே ஏரிவில் சுற்றி சுற்றி வருவதும், பிறகு பைக் பக்கத்தில் வந்து, திருட முயற்சிப்பதும், அந்த கேமராவில் பதிவாகியுள்ளன.

பைக்கின் சைடு லாக்
நீண்ட நேரமாக முயற்சித்தும், பைக்கின் சைடு லாக்கை அந்நபரால் உடைக்க முடியவில்லை.. அதே தெருவில் நடந்து சென்று, தேடியலைந்து ஒரு பொருளை கொண்டு, மீண்டும் பைக்கின் சைடு லாக்கை உடைக்க முயல்கிறார்.. அப்போதும் முடியவில்லை.. யாராவது தன்னை பார்க்கிறார்களா என்று அடிக்கடி சுற்றுமுற்றும் பார்த்து கொண்டே இந்த திருட்டு சம்பவத்தை அந்நபர் செய்வது, கேமராவில் பதிவாகி உள்ளது.
ஆனால், இந்த நபர் யாரென்று தெரியவில்லை.. முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் முகமூடி அணிந்திருக்கிறார்.. சிசிடிவி கேமரா இருப்பது தெரிந்தும்கூட, தலை முதல் கால்வரை மொத்தமாக "கவர்" செய்து வந்துள்ளார்.. இதனால் அந்த நபரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது... அத்துடன் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியே வாகனங்களை நிறுத்தி வைக்கும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நெல்லையில் திருட்டு பயம்
எனவே திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகரித்து, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரியும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி நிம்மதியாக வசிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில் இதுபோன்று நள்ளிரவு நேரத்தில் நடக்கும் திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களின் நிம்மதியைக் கெடுக்கும் நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு பதற்றமான சூழல் அப்பகுதியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது...!!


Click it and Unblock the Notifications
