ஜான் பாண்டியன் புட்டு புட்டு வெச்சிட்டாரு! திமுக, தவெகவை விடலயே! அப்ப தமமுக யாருடன் கூட்டணி தெரியுமா
நெல்லை: நடிகர் விஜய்க்கு கூட்டத்தை பார்ப்பதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவருக்குக் கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது. தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் அவற்றை நிறைவேற்றுவது கடினம். அவர் முதலில் தேர்தலை சந்திக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்" என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
இப்போது வரை என்டிஏ கூட்டணியில் தான் உள்ளோம் என்றும், தங்களது கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான், ஆனாலும் , தேர்தல் அறிவித்த பிறகு, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி, யாருடன் கூட்டணி என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்று ஜான் பாண்டியன் சமீபத்தில் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணியில் இணையமாட்டோம் என்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தொடர்ந்து கூறி வருகிறார்..
நெல்லையில் ஜான் பாண்டியன்
இப்படிப்பட்ட சூழலில் இன்று மீண்டும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.. நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், "தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை போட்டி என்பது அதிமுக, திமுக இரு கட்சிகளிடையேதான். மூன்றாவது, நான்காவது அணிகள் போட்டிக்கு வர வாய்ப்பில்லை.
தவெக விஜய்
நடிகர் விஜய்க்கு கூட்டத்தை பார்ப்பதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவருக்குக் கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது. தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் அவற்றை நிறைவேற்றுவது கடினம். அவர் முதலில் தேர்தலை சந்திக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. பெண்களை அவர்களாகவே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அரசு அவர்களை விட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு
கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தால் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் இங்குள்ள சில்லறை விற்பனையாளர்களை மட்டுமே கைது செய்கின்றனர். ஆனால் கஞ்சாவின் ஆணிவேராக விளங்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் புள்ளிகளைக் கைது செய்யத் தவறிவிட்டனர்..
அனைத்து விஷயங்களுக்கும் அரசை மட்டுமே குற்றம் சொல்வது சரியல்ல. தங்கள் குழந்தைகள் மது மற்றும் போதைக்கு அடிமையாகாமல் வளர்ப்பது பெற்றோரின் முதன்மையான கடமை. இதில் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு..
நெல்லை, தென்காசி
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளை அதிகரித்து வருகிறது.. இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீதிக்கு வந்து போராட வேண்டும்..
முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல தலைமை அலுவலகத்தில் ஜான் பாண்டியனின் பிறந்த நாளை விழா கொண்டாடப்பட்டது. இதில் ஜான் பாண்டியன் மற்றும் மயோபதி டாக்டர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.. இந்த நிகழ்வின் மூலம் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்
இதன் ஒரு பகுதியாக, 4 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், 25 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள், விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், 200 பேருக்கு அரிசி, பருப்பு, வேஷ்டி மற்றும் சேலைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications