ஆலங்குளம் தொகுதி மக்களின் அன்பை பெறப்போவது யார்? கள நிலவரம் சொல்வது என்ன?
தென்காசி: தமிழக தேர்தல் களம் 'எக்ஸ்பிரஸ்' ரயிலை விட மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் கொதிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார்? கள நிலவரம் என்ன? என்பது பற்றி இப்போது காண்போம்.

ஆலங்குளம் தொகுதி
ஆலங்குளம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 146 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 18 பெண் வாக்காளர்களும் அடங்குவர். 7 திருநங்கைகளும் உள்ளனர். இந்த தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக மாறி, மாறி வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன. சமீபத்திய தேர்தல்களில் 2001-ல் அதிமுகவும், 2006-ல் திமுகவும், 2011-ல் மீண்டும் அதிமுகவும் வெற்றியை ருசித்தன.

யார் யாருக்கு போட்டி?
கடந்த 2016 தேர்தலில் திமுகவின் பூங்கோதை ஆலடி அருணா சுமார் 4,700 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எப்.சி கார்த்திகேயனை வீழ்த்தினார். இந்த முறை பூங்கோதை ஆலடி அருணா ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கி உள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் கோதாவில் குதித்துள்ளார்.

தொழிலாளர் நலன் கேள்விக்குறி
ஆலங்குளம் தொகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகள் ஆவர். அதிலும் பீடி சுற்றும் தொழிலே இந்த தொகுதி மக்களின் உயிர் நாடியாக உள்ளது. இந்த தொழிலாளர்களின் நலன் காக்க, அவர்களின் நிலையான வருமானத்தை உறுதி செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. குடிநீர் பிரச்சினை தொகுதியில் எப்போதும் தலைவிரித்தாடுகிறது.

தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை
வற்றாத ஜீவநதியான தாமிபரபரணி கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றன. ''இங்குள்ள ஆலங்குளம் கால்வாயை தூர்வாரி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்'' என்று காலம், காலமாக எம்.எல்.ஏ.க்கள் அளித்த வாக்குறுதிகள் இன்று வரை கானல் நீராகவே உள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனை
சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வர்த்தக தலைநகராக விளங்கும் ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது. பீடி சுற்றும் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படும் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. மேலும், அவசர சிகிச்சைக்கும், பேறுகால சிகிச்சைக்கும் கூட 23 கி.மீ.தூரம் உள்ள தென்காசிக்கும், 30 கி.மீ தூரமுள்ள நெல்லைக்கும்தான் செல்ல வேண்டியதுள்ளது.

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை
நெல்லை-தென்காசி நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் முழுக்க, முழுக்க எமனின் சாலையாக மாறியுள்ளது. நான்கு வழிச்சாலை பணியை காரணம் காட்டி எம்.எல்.ஏ.க்கள் யாரும் நீண்ட காலம் இந்த சாலையின் நிலை குறித்து யோசிப்பது கூட இல்லை. இதனால் வாரத்திற்கு குறைந்தது ஒருவரின் உயிரையாவது இந்த சாலை பறித்து விடுகிறது. பல ஆண்டுகள் கோரிக்கையான மகளிர் கலைக்கல்லூரி அமைக்கப்பட்ட நிலையில், மகளிர் மேல்நிலைப்பள்ளி கோரிக்கை என்பது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பேருந்து பணிமனை எங்கே?
நெல்லை, தென்காசி மற்றும் அண்டை கிராமங்களுக்கு செல்வதற்காக தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பேருந்து போக்குவரத்தை நாடி வரும் நிலையில் ஆலங்குளத்தில் பேருந்து பணிமனை அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலமாக கோரிக்கையாகவே உலா வருகிறது. மேலும், தொகுதியில் உள்ள முக்கூடல், கடையம் உள்பட பெரும்பாலான பகுதிகள் நீண்ட காலமாக வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

பூங்கோதைக்கு வெற்றி வாய்ப்பு
ஆலங்குளம் தொகுதியில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக நாடார் சமுதாய மக்கள் இருப்பதால் திமுக, அதிமுக மட்டுமில்லாமல் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்பட பிற கட்சிகளும் இந்த சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்களையே களமிறக்கி உள்ளனர். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பூங்கோதை, தொகுதி மக்களுக்கு பரிச்சியமானவர் என்பதால் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர்.

மனோஜ் பாண்டியன் மீதும் நம்பிக்கை
பூங்கோதை ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை என்று ஒரு தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளதாலும், ''தொகுதியின் மூத்த நிர்வாகிகளை பூங்கோதை மதிப்பதில்லை'' என்று சொந்த கட்சியிலேயே உலா வரும் பேச்சுகளும் பூங்கோதையின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்கின்றனர். மனோஜ் பாண்டியன் இந்த தொகுதிக்கு பெரிய அளவில் அறிமுகமில்லாதவர் என்ற போதிலும், அரசின் இலவச வாக்குறுதிகளும், திட்டங்களும், பூங்கோதை மீதான அதிருப்திகளும் வாக்குகளாக மனோஜ் பாண்டியன் வசம் செல்ல வாய்ப்புள்ளது.

வாக்குகளை பிரிப்பது இவர்தான்
இது தவிர சுயேச்சையாக போட்டியிடும் 'நடமாடும் நகைக்கடை' ஹரி நாடார் வீடு, வீடாக பிரசாரம் செய்து மக்களை ஈர்த்து வருவதால் திமுக-அதிமுக ஓட்டுகளை கொஞ்சம் பிரிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி நாம் தமிழர், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களும் நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளனர். கணிப்புகள் பலவிதமாக இருந்தாலும் ஆலங்குளம் தொகுதி மக்களின் அன்பை பெறப்போவது யார்? என்பதை மே 2 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications