பெரியபாளையத்தில் ஆசையாக பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமிக்கு வாந்தி, மயக்கம்! மருத்துவமனையில் உயிரிழப்பு!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கடந்த 3-ஆம் தேதி பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த லட்சிவாக்கம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் செங்குன்றம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஸ்ரீத்திகா என்ற 9 வயது மகள் இருந்தார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி தண்டலம் பகுதியில் உள்ள பஜ்ஜி கடையில் சிறுமி ஸ்ரீத்திகா, பஜ்ஜி சாப்பிட்ட போது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக சிறுமியை அவரது பெற்றோர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீத்திகா உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிட்ட போது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இறப்புக்கான காரணம் குறித்து உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
