திருத்தணி அருகே சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி.. 4 வயது குழந்தை பரிதாபமாக பலி
திருவள்ளூர்: குழந்தைகளுக்கு மாத்திரை, மிட்டாய் போன்றவற்றை கொடுக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். திருத்தணி அருகே காய்ச்சலுக்காக மாத்திரை கொடுக்கப்பட்ட நிலையில், தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் எந்தப் பொருள்களை எடுத்தாலும் முதலில் வாயில் வைக்கும் பழக்கம் தான் இருக்கும். விளையாட்டு சாமான்கள், கோலிகுண்டு, தைல டப்பாக்கள் போன்ற சிறிய பொருள்களை குழந்தைகள் விழுங்கி விடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்திவிடும்.

இந்நிலையில், திருத்தணி அருகே காய்ச்சலுக்காக குழந்தைக்கு மாத்திரை கொடுக்கப்பட்ட நிலையில், தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலுக்காக குழந்தைக்கு பாதி மாத்திரையை தாய் அளித்த போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள பிஆர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேலு, சசிகலா தம்பதி. நெசவுத் தொழிலாளி. இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று நள்ளிரவில் 4 வயது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையின் தாய் காய்ச்சலுக்காக மாத்திரையை பாதியாக உடைத்து கொடுத்துள்ளார்.
அப்போது, அந்த மாத்திரை குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியுள்ளது. இதில், அந்தக் குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு மிருதுவான பொருட்களை கொடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு மாத்திரையை அப்படியே கொடுக்காமல் பொடியாக மாற்றி குழைத்து கொடுப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications