புதுமைப்பெண் திட்டம் 2.0 தொடக்கம்.. உயர்கல்வி சேர்க்கை 27% உயர்வு.. மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை உயர்ந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர்கல்வி சேர்க்கை 27 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுமைப் பெண் 2.0 திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடு தன்னிறைவுடன் திகழ மக்கள் கல்வியறிவு பெறுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த நிகழ்வில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

புதுமைப்பெண் திட்டம்
இந்த திட்டத்தின் மூலமாக குடும்ப சூழல், வறுமை காரணமாக படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய இது வழிவகை செய்யும் என்று தமிழ்நாடு அரசு கூறியது. முதற்கட்டமாக இத்திட்டத்தால் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இடைநின்ற 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வி பயில்வதாக அரசு அறிவித்தது.

மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில், புதுமைப் பெண் 2.0 திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1,04,347 மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரன்பிற்குரிய புதுமைப் பெண்களே என்று தனது உரையை தொடங்கினார்.

உயர்கல்வி சேர்க்கை உயர்வு
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர்கல்வி சேர்க்கை 27 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட ஒரு கையெழுத்து லட்சக்கணக்கான பெண்களின் தலையெழுத்தை மாற்றியது. திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. நாடு தன்னிறைவுடன் திகழ மக்கள் கல்வியறிவு பெறுவது அவசியம்.

பெண்களுக்கான திட்டங்கள்
கல்வி எல்லோரும் சென்றடையும் வகையில் திராவிட இயக்கத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக பெண் கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, அரசு பணியிடங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சியில் இருந்தபோது உருவாக்கி இருக்கிறது.

முதல் கையெழுத்து
இந்த ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து இட்டது மகளிருக்கு கட்டணமில்லா பேரூந்து திட்டம் தான். பள்ளிக்கு செல்லும் மாணவிகள் அதன்பிறகு உயர்கல்வியை தொடரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டது. மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

5 மாதத்தில் ரூ.69.44 கோடி
முதல்கட்டமாக இந்த திட்டத்தினை வடசென்னையில் உள்ள பாரதி கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக இந்த திட்டத்துக்காக கடந்த 5 மாதங்களில் 69.44 கோடி ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வி படிப்பை தொடர்ந்துள்ளனர். இதுவே இந்த திட்டத்தின் வெற்றி என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications