"கஞ்சா" போதை.. பேக்கரியில் ரகளை செய்த 2 ரவுடிகள் கைது.. "வழுக்கி" விழுந்ததால் கால்கள் முறிந்தன
திருவள்ளூர்: பேக்கரியில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகளை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் வழுக்கி விழுந்ததால் காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு அடுத்துள்ள நரசிங்கபுரம் பகுதியில் ரவுடிகள் தொல்லை இருப்பதாக சில காலமாகவே அங்கே கடை நடத்தி வருவோர் கூறி வந்தனர்.

இதற்கிடையே அங்குள்ள பேக்கரியில் மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியான நிலையில், அது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
மிரட்டல்: அதாவது மப்பேடு பகுதியில் பேக்கரி கடை ஒன்று அமைந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி பேக்கரி உரிமையாளர் இல்லாத நிலையில், மனைவி மட்டும் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரவு 9.30 மணியளவில் பேக்கரிக்கு வந்த 3 இளைஞர்கள் ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளனர். அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், வியாபாரம் ஆகவில்லை என்றும் அவ்வளவு பணம் இல்லை என்றும் கடை உரிமையாளர் பெண் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை அடித்து உதைத்து ரகளை செய்துள்ளனர். அரிவாளைக் காட்டி வெட்டிவிடுவோம் என மிரட்டிய அவர்கள், போலீசில் புகார் அளித்தால் குடும்பத்தோடு வெட்டி கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்,
கைது: மேலும், கல்லா பெட்டியில் இருந்த பணத்தையும் பிடுங்கு சென்றுள்ளனர். இந்த அனைத்து சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அது இணையத்தில் டிரெண்டானது. இதையடுத்து அந்த .சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், பேக்கரியில் சென்று மிரட்டிய இளைஞர்கள், திருவள்ளூரைச் சேர்ந்த முகேந்தர் அமர்நாத், வினோத்குமார் என்கின்ற பாபா, பிரவீன் ஆகியோர் என்பதை கண்டறிந்தனர்.
b இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட இருவரும் கீழே விழுந்ததால் அவர்கள் இருவரது கால்களும் முறிந்தன. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள சரித்திர பதிவேடு ரவுடி முகேந்தர் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications