லஞ்சம் வாங்குவதில் வருவாய்துறை தான் முதலிடம்! ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாமில் அதிர்ச்சித் தகவல்!
திருவள்ளூர்: தமிழ்நாட்டிலேயே லஞ்சம் வாங்குவதில் முதலிடம் வகிக்கும் துறை வருவாய்துறை தான் என்பது ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மூலம் தெரியவந்துள்ளது.
அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுவதுடன் அது குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகின்றன. அரசு அலுவலகங்களில், குறிப்பாக வருவாய்துறை சார்ந்த வேலைகளுக்கு பணம் கொடுக்காமல் எதையும் சாதிக்க முடியாது என்ற அவலம் இன்னும் தொடர்கின்றன. நிலம் அளப்பதற்கு என்னதான் அரசுக்கு ஆன்லைன் மூலம் முறைப்படி பணம் கட்டி ரசீது பெற்றாலும் நில அளவையருக்கு படியளக்காமல் நிலத்தில் கால் வைக்கமாட்டார்.

அதேபோல் வி.ஏ.ஓ. தொடங்கி தாசில்தார் அலுவலகங்கள் வரை இன்னும் எத்தனையோ கதைகளை சொல்லலாம். இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்து ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்திய திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி, தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்குவதில் எந்த துறை முதலிடம் வகிக்கிறது எனக் கேட்டார். இந்தக் கேள்விக்கு ''நோ ஐடியா மேடம்'' என பதில் சொல்லிவிட்டு கப்சிப் என்று அமர்ந்திருந்தார்கள் சிலர்.
ஆனாலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி பல முறை கேட்டதால், ஆர்.டி.ஓ. ஆஃபிஸ், பத்திரப்பதிவு அலுவலகம் என ஆளுக்கு ஒன்றை கூறினர். கடைசியில் தாமே பதிலை சொல்வதாக கூறிய ஆய்வாளர் தமிழரசி, லஞ்சம் வாங்குவதில் வருவாய்துறை தான் முதலிடம் வகிப்பதாகவும் பொதுமக்கள் சான்றிதழ் இல்லாமல் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது என்பதால் அவர்கள் அரசின் துறைகளில் முதலில் நாடுவது வருவாய் துறையை தான் எனக் கூறினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ட்விஸ்ட் ஒன்றையும் வைத்தார் தமிழரசி. உங்களது இத்தனை ஆண்டுக்காலம் அரசுப் பணியில் யாரிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை என யாராவது கூறமுடியுமா, அப்படியிருந்தால் சொல்லுங்க நானே உங்கள் காலில் விழுகிறேன் என்றார். திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் முதல் அலுவலர்கள் வரை யாருமே நான் லஞ்சம் வாங்கியதில்லை என சொல்லவில்லை. இதன் மூலம் அரசு அலுவலகங்கள் எந்தளவு இருக்கின்றது என்பது தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications