முதலில் தேசிய கீதம்.. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து.. ஆளுநர் ரவி பங்கேற்ற பொங்கல் விழாவில் சம்பவம்!
திருவள்ளூர்: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் வெளியேறிய நிலையில், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டு வருகிறது.
அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையை வாசிக்காமல் சில நிமிடங்களிலேயே வெளியேறினார். இதன்பின் ஆளுநர் மாளிகை தரப்பில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமும், அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமையாகும்.

இன்று ஆளுநர் சபைக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. ஆளுநர் அரசியலமைப்பு சட்டக் கடமையை அவைக்கு நினைவூட்டியதோடு, பேரவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை தேசிய கீதம் பாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆளுநரின் இந்த செயலை, சட்டப்பேரவையின் கடைசி நாளில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அதற்கு ஆளுநர் மாளிகை தரப்பில், முதலமைச்சருக்கு ஆணவம் நல்லதல்ல. அடிப்படைக் கடமைகளை செய்ய சொல்வது சிறுபிள்ளைத்தனமானது, அபத்தமானது என்று முதலமைச்சர் கூறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்பாடு அருகே உள்ள மேல அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் பங்கேற்றார். அப்போது பொங்கல் விழா நிகழ்ச்சி தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட்டு, அடுத்ததாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதன்பின் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கிறது. தொடர்ந்து பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், மீனவ சமுதாயத்தினர் பிரதமர் நரேந்திர மோடியின் மனதில் இடம் பிடித்துள்ளனர். பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் மீனவர்களின் பிரச்சனையை எடுத்து கூறுகிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications