திருவள்ளூர் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. சொந்த ஊரில் பதற்றம்..போலீஸ் குவிப்பு
திருவள்ளூர்: தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் சகோதரர் உடலை பெற்றுக்கொண்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சொந்த ஊரில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகிலுள்ள கீழ்சேரிப் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அருகே பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி இறந்த விவகாரத்தில் உண்மை தன்மை வேண்டும் என்று கூறி, அவரது உறவினர்கள் திருத்தணி அருகே உள்ள மாணவியின் சொந்த ஊரான தெக்களூர் கிராமத்தில் சாலை மறியலில் போராட்டங்களில் நேற்று ஈடுபட்டனர்.

மாணவி உடல் பிரேத பரிசோதனை
மாணவியின் பிரேத பரிசோதனை செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் சிறப்பு அனுமதியுடன் தொடங்கி நடைபெற்றது. மருத்துவமனை டீன் அரசி தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடமும் சகோதரரிடமும் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் சகோதரர் சரவணன் உடலைப் பெற்றுக்கொண்டார்.

சொந்த ஊரில் சோகம்
மாணவியின் உடல் கூராய்வு முடிந்த பின்பு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக அவரது கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருப்பதுடன், சாலையில் திரண்டுள்ளனர். மாணவியின் தந்தை உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வீட்டில் இருக்கிறார். மாணவியின் வீட்டு முன்பு மாணவியின் உறவினர்கள் அதிகளவு கூடியுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் குவிப்பு
இந்நிலையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆணி விஜயா தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர், வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர், ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர், ஆகியோர்கள் மேற்பார்வையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிக்கு விடுமுறை
மாணவி பயின்ற பள்ளிக்கு இன்று இரண்டாவது நாளாகவும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் திருத்தணியில் இருந்து மாணவியரின் சொந்த ஊர் வரும் வழியில், வெளி ஊர் நபர்கள் உள்ளே வராத அளவிற்கு 12 இடங்களில் சாலை தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவியின் சொந்த ஊரில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Recommended Video

போக்குவரத்து துண்டிப்பு
மாணவியின் சொந்த ஊர் பகுதியில் இருந்து பள்ளிப்பட்டு பேரூராட்சி, பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, என 50க்கும் மேற்பட்ட ஊருக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த பகுதி வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த பேருந்து சேவைகள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications