"என்னம்மா பண்றே" மழைக்கு விட்ட லீவை கேன்சல் செய்துடவா? சிறுமியை "கண்டித்த" ஆட்சியர்
திருவள்ளூர்: லீவை கேன்சல் செய்துடுவேன் என சிறுமி ஒருவரை திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் செல்லமாக கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது. கலெக்டர் மிரட்டியதும் சிறுமி வெட்கப்பட்டு தனது தாயின் பின்னால் ஒளிந்து கொண்டார். கலெக்டரும் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.
வங்கக் கடலில் உருவான மொந்தா புயல் கடந்த 27ஆம் தேதி உருவாகி, 28ஆம் தேதி ஆந்திரா அருகே மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது.

இதனால் தெற்கு ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னையில் கடந்த திங்கள்கிழமை முதலே கனமழை பெய்து வருகிறது. அதாவது தீபாவளி நாள் முதலே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் இல்லை.
வானம் மூடியபடியே மழை விட்டு விட்டு பெய்தோ இருந்தது. இதனால் ஆங்காங்கே பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. கடந்த 28ஆம் தேதி மொந்தா புயல் ஆந்திரா அருகே கரையை கடந்தாலும் திங்கள்கிழமை மாலை முதல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு மிக கனமழை பெய்தது.
இதனால் ஆங்காங்கே சாலையில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு மாநகராட்சி பள்ளி வளாகத்திலும் தண்ணீர் தேங்கியது. மழை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தால் தேவையில்லாமல் காய்ச்சல், இருமல் என உடல் உபாதைகள் வருவதோடு மின்சாரம் பாய்வது, சுற்றுச்சுவர் இடிந்து விழுவது உள்ளிட்ட ஆபத்துகள் இருப்பதால் மழையின் தன்மையை கருத்தில் கொண்டு ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அன்று சென்னையை காட்டிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் மழை பாதிப்புகளை பார்வையிட ஆட்சியர் பிரதாப், தனது காரில் சென்றார். அப்போது ஒரு சிறுமி மழையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்ததை பார்த்தார். உடனே காரை நிறுத்திய அவர், "வீட்டுக்குள் போங்க, மழையில் சைக்கிள் ஓட்டலாமா? வெளியே இருந்தீங்கன்னா லீவை கேன்சல் செய்துடுவேன்" என்றார். உடனே அந்த சிறுமி வெட்கி, தனது தாயிடம் ஒளிந்து கொண்டார்.
ஆட்சியரும் சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டார். ஆட்சியர் செல்லமாக கண்டித்ததை கேட்டு அங்கிருந்தவர்களும் சிரித்தனர். மாவட்டத்தில் மழை பெய்தால் உடனே கலெக்டருக்கு போன் செய்து மழை பெய்யுது லீவுவிடுங்க சார் மாணவர்கள் கேட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
அது போல் ஆட்சியருக்கு ட்வீட் அனுப்பி அதற்கு பதிலையும் மாணவர்கள் பெற்றுள்ளனர். இவ்வாறு ஆட்சியர்கள், பள்ளி மாணவர்களுடன் பழகி வருவது சிரிப்பை வரவழைக்கிறது.












Click it and Unblock the Notifications