வில்லிவாக்கமே விக்கித்தது.. காலையிலேயே கலங்கிய மக்கள்.. மறுபடியும் "அதே" போல.. என்னாச்சு தெரியுமா?
திருவள்ளூர்: திடீரென ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால், வில்லிவாக்கம் பகுதியே பரபரப்பாகிவிட்டது. அப்படி என்ன நடந்தது?
திருவள்ளூரில் இருந்து, இன்று காலை, சென்னை சென்ட்ரல் நோக்கி வழக்கமான மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது... காலை நேரம் என்பதால், பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து பெட்டிகளுமே கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
காலை 7.15 இருக்கும்போது, வில்லிவாக்கம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெட்டியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் பயணிகள் பதறிப்போனார்கள்.

அலறிய பயணிகள்: அதற்குள் வில்லிவாக்கம் ரெயில்வே ஸ்டேஷனும் வந்துவிட்டது.. புகை வெளியேறிய பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பிளாட்பாரத்தில் இறங்கினார்கள்..
ஆனால், அந்த ரயில் பெட்டியில் வயதானவர்கள் நிறைய பேர் இருந்தனர்.. பெண்களும், சிறுவர்களும் நெருக்கி தள்ளிய நிலையில் அவர்களால், உடனடியாக கீழே இறங்க முடியவில்லை.. அனைவரும் ஒவ்வொருவராக வெளியேற சிறிது நேரமாகிவிட்டது..
இந்த தகவல் அறிந்ததும், ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்தனர்.. கரும்புகை வந்த ரயில் பெட்டியை பார்வையிட்டனர். பிறகு, அந்த பெட்டியை மட்டும் தனியாக கழற்றப்பட்டு, ஆவடி பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், அரை மணி நேரம் தாமதமாக மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த தாமதத்தினால், அந்த வழியில் வந்த மற்ற ரயில்களும் வரும்வழியிலேயே சிக்னல் தரப்பட்டு நிறுத்தப்பட்டன..
மின்சார ரயில்கள்: இதனால் அந்தந்த ரயில்களில் வந்த பயணிகளும், அவதிக்கு ஆளாகினார்கள். சிலர் வேலைக்கு நேரமாகிவிட்டதால், சில பயணிகள் வழியிலேயே இறங்கி பஸ், ஆட்டோக்களை பிடித்து போனார்கள்..
மின்சார ரெயில்கள் வேகமாக செல்லும்போது பிரேக் அழுத்தினால், இப்படி கரும்புகை வெளியே வருமாம்.. இது வழக்கமான ஒன்றுதான் என்கிறார்கள் அதிகாரிகள். அளவுக்கு அதிகமான புகை வந்துவிடவும்தான், பயணிகள் பீதியடைந்துள்ளனர்.. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்கிறார்கள்.
புகை மண்டலம்: இப்படித்தான் 2 நாளைக்கு முன்பும், மதுரை ரயிலில் தீப்பிடித்தது.. விடிகாலை நாலரை மணிக்கு, ஒரே ஒரு பெட்டியில் தீப்பிடித்து புகையும் சூழ்ந்துவிட்டது. அந்த பெட்டியிலும், வயதானவர்கள் சிக்கிக்கொண்டார்கள். உடனடியாக அவர்களால் வெளியேற முடியாததால், நெருப்பிலேயே கருகிவிட்டனர். அந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மக்கள் மீள முடியாத நிலையில், இன்றைய சம்பவமும் லேசாக பயத்தை தந்துவிட்டது.












Click it and Unblock the Notifications