திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவண்ணாமலை கோவிலில்.. பாண்டியர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.. வியக்க வைக்கும் தகவல்கள்!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கம் கோயில்களுள் ஒன்றான அக்னி லிங்கம் கோயிலில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் "திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின்" தலைவரும் , வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம், அவ்வமைப்பின் ஆவண பிரிவு மூலம் மீளாய்வு செய்த பொழுது தெற்கு நோக்கிய இக்கோயிலின் நுழைவு வாயிலில் இடப்பக்க சுவற்றில் 17 வரி கல்வெட்டு ஒன்று ஆவணம் செய்யாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

'ஸ்வஸ்தஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள்' என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டானது சுந்தர பாண்டியன் என்று சொல்லப்பட்டிருந்தாலும் , பிற்கால பாண்டியர்களில் எந்த சுந்தர பாண்டியன் என்று அறிய மெய்க்கீர்த்தியில் தெளிவான விவரங்கள் சொல்லப்படவில்லை.

 திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி

கல்வெட்டு கண்டுபிடிப்பு

கல்வெட்டு கண்டுபிடிப்பு

இந்த கல்வெட்டில், வீரராமநல்லூர் என்னும் ஊரில் குடியேறும் தறிக்குடிகள் , காசாக்குடி மக்கள், செட்டிகள் மற்றும் வாணியர்கள் மாதம் ஒன்றுக்கு ஒரு மாகாணி பணம் இக்கோயிலுக்கும், ஒரு மாகாணி பணம் ஊர்சபைக்கும் வரியாகச் செலுத்து வேண்டும் என்றும் இதை மாற்றம் செய்வோர்கள் சிவத்துரோகம் மற்றும் ராஜ்ஜியதுரோகம் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டின் காலம்

கல்வெட்டின் காலம்

இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள த்வாதசி திதி , அவிட்டத்து நாள் மற்றும் திங்கள் கிழமையும் கொண்டு இக்கல்வெட்டானது இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1276-1292) கல்வெட்டு என்று அறிய முடிகிறது. அவனின் பன்னிரெண்டாம் ஆட்சியாண்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி 1288 ஆம் ஆண்டாகும்.

பொற்கால ஆட்சி

பொற்கால ஆட்சி

முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1251-1268) காலத்தில் சோழத்தின் மீது படையெடுத்து அவர்களை அடக்கியதன் மூலம் , பாண்டியர்கள் கீழ் அடங்கி ஆட்சி செய்த வந்த மூன்றாம் ராஜேந்திரனின் மறைவுக்கு (கி.பி 1279) பின் 400 வருடச் சோழ சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து குமரி முதல் நெல்லூர் வரை பாண்டியர்கள் ஆட்சி கோலோச்சியது. இவனுடன் மூன்று வருடம் இணை ஆட்சி புரிந்து பின்னர் கி.பி 1268 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி 1268-1311) காலமே பாண்டியர்களின் பொற்கால ஆட்சியாகக் கருதப்படுகிறது.

இணையாட்சி புரிந்தனர்

இணையாட்சி புரிந்தனர்

எஞ்சி இருந்த சேரநாட்டின் கொல்லத்தையும் வென்று குமரி முதல் நெல்லூர் வரை உள்ள மிகப்பெரிய நிலப்பரப்பை முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் தன் தம்பிமார்கள் இருவர் மற்றும் புதல்வர்கள் இருவருடன் சேர்ந்து ஒரே சமயத்தில் ஐந்து பேராக இணையாட்சி புரிந்தனர். அந்த ஐந்து பேருள் ஒருவரும் , மாறவர்மன் குலசேகரின் தம்பியுமான இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் தான் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் மன்னன் ஆவான்.

வீரராமநல்லூர் எனும் ஊர்

வீரராமநல்லூர் எனும் ஊர்

இம்மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகரனுடன் இணையாட்சி செய்த பொழுது கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு கொங்கு பகுதியை ஆட்சிசெய்தான். பழனி கோவிலுக்குத் தனது பெயரில் ஏற்படுத்தப்பட்ட அவனிவேந்த ராமநல்லூர் என்ற ஊரைத் தானமாக வழங்கிய செய்தியை அறியமுடிகிறது. இதன்மூலம் இக்கல்வெட்டின் குறிக்கப்படும் ஊரான வீரராமநல்லூர் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சங்கராமநல்லூர் பகுதியாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

தறிக்குடிகள்

தறிக்குடிகள்

அக்காலத்தில் நெசவு தொழில் செய்பவர்கள் தறிக்குடிகள் என்றும் , வணிகம் செய்பவர்கள் செட்டிகள் என்றும் , செக்கில் எண்னெய் ஆடும் தொழில் செய்பவர்கள் வாணியர்கள் என்றும் வழங்கப்பட்டனர். எனவே கல்வெட்டில் குறிக்கப்படும் தறிக்குடிகள் , கசாக்குடி மக்கள் , செட்டிகள் மற்றும் வாணியர்கள் இவ்வூரில் குடியேற வரிப்பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம்.

சிறப்பாக இருந்த ஆட்சி

சிறப்பாக இருந்த ஆட்சி

இதே காலகட்டத்தில் பாண்டிய நாட்டிற்க்கு வருகை புரிந்த இத்தாலி நாட்டுப் பயணியான மார்கோ போலோ இம்மன்னனை "சௌந்தர பாண்டி தேவர்" என்று தனது பயணக் குறிப்புகளில் குறிப்பதோடு , ஐந்து மன்னர்கள் சேர்ந்து இணையாட்சி செய்வதையும் வெகுவாக பாராட்டுகிறார். இதே போல முகமதியப் பயணியான வாசாபும் தனது குறிப்புகளில் இம்மன்னனை குறிப்பிட்டுள்ளதை வைத்து இக்காலகட்டத்தில் இம்மன்னனும் பாண்டிய பேரரசு சீரும் சிறப்புமாக இருந்ததை அறிய முடிகிறது.

மேலும் தகவல்கள்

மேலும் தகவல்கள்

கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கம் கோயில்கள் அனைத்தும் சாலையின் இடப்புறமாக அமைந்திருக்க, அக்னி லிங்கம் மட்டும் வலது புறம் அமைந்திருப்பதும் காலத்தின் புதிராக இருந்து வரும் நிலையில் , கல்வெட்டுத் தகவல் கிடைக்கப்பெற்ற ஒரே கோயில் இதுவாகும். இதுவரையில் சரியான தகவல்கள் கிடைக்பெறாமல் அஷ்டலிங்க கோயில்கள் 16 ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் என்ற அனுமானத்தையும் இக்கல்வெட்டு உடைக்கிறது. கிரிவலப் பாதையில் உள்ள இதர கோயில்களையும் ஆய்வு செய்தால் மேலும் தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம்.

English summary
A 13th century Pandyan inscription has been found in the Agni Lingam Temple at Thiruvannamalai. There are various astonishing information in this inscription
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X