Chithra Pournami: திணறிப்போன திருவண்ணமாலை.. கிரிவலம் முடிந்ததும் ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காட்பாடி - விழுப்புரம் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்ததும் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டும் ரயிலில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விமரிசையாக நடைபெறும்.
பெளர்ணமி
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 09:57 மணிக்கு தொடங்கிய சித்ரா பௌர்ணமி இன்று இரவு 11:08 மணிக்கு நிறைவடையும் என திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆண்டுக்கு ஒரு முறை வரக்கூடிய சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து நேற்று இரவு நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபடி பௌர்ணமி நிலவு ஒளியில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்.
கிரிவலம்
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
சித்ரா பௌர்ணமிக்காக திருச்சி, விழுப்புரம், மன்னார்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 24 ரயில்களுடன் சேர்த்து சித்ரா பௌர்ணமிக்காக 8 சிறப்பு ரயில்களுடன் மொத்தமாக 32 ரயில்கள் 30-ம் தேதி நேற்று முதல் 2-ம் தேதி நாளை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குவிந்த பக்தர்கள்
இந்நிலையில், விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலையில் ரயில் நிலையத்தில் விடியற்காலை முதல் குவிந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில் காட்பாடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.

திருவண்ணாமலை வந்தடைந்த ரயிலில் பௌர்ணமி கிரிவலம் முடித்து ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர். ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது. இதனால் ரயில்வே நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications