ஷாக்.. ஹிஜாப் அணிந்ததால் தேர்வெழுத அனுமதி மறுப்பு! வெளியேற்றப்பட்ட ஆசிரியை! பரபரத்த திருவண்ணாமலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இன்று பாரத் இந்தி பிரசார சபாவின் இந்தி தேர்வு எழுத சென்ற அரபு ஆசிரியை சென்றார். முதலில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஹிஜாப்பை அகற்றாமல் தேர்வெழுதியதாக கூறி வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் பாரத் இந்தி பிரசார சபாவின் தென்னிந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இது ஒரு கல்வி சார்ந்த அமைப்பாகும். இந்தி பேசாதா மக்களிடம் இந்தி மொழியை கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.

இந்த சபா சார்பில் ஆண்டுதோறும் இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு வகைகளில் 8 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான இந்தி பிரசார சபா சார்பில் இன்று இந்தி தேர்வுகள் நடந்தன. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் ஏராளமானவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் இந்த தேர்வு நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்று இந்தி மொழி தேர்வை எழுதினர். திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு மொழி ஆசிரியையான ஷபானாவும் இந்த தேர்வை எழுத வந்தார்.
தேர்வெழுத அவர் ஷபானா ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அவர் தனது ஹால்டிக்கெட்டை காண்பித்து தேர்வறைக்கு சென்றார். அவருக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. தேர்வும் தொடங்கிய நிலையில் 10 நிமிடம் கழித்து ஹிஜாப்பை அகற்றும்படி ஷபானாவிடம், தேர்வறை கண்காணிப்பாளர் கூறியுள்ளனர். ஹிஜாப் அணிவதை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இதனால் அகற்ற முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹிஜாப்பை கழற்ற மறுத்ததாக கூறி அவர் தேர்வறையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்த எஸ்டிபிஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் பள்ளிக்கு சென்று ஷபானா வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் கீழ்பென்னாத்தூர் போலீசார் விரைந்து வந்து தேர்வு எழுத வந்த இளம்பெண்ணிடமும், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஷபானாவுக்கு தேர்வெழுத மதிய வேளையில் நேரம் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் நடந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தேர்வு எழுதவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications