திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ரூ.70 லட்சம் அபேஸ்.. பின்னணியில் வடமாநிலத்தவர்களா? ஐ.ஜி கண்ணன் பேட்டி
இந்த கொள்ளை சம்பவத்திற்கு காவல்துறையினர் யாரேனும் துணை போயிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஜி கூறியுள்ளார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் ரூ.70 லட்சம் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டிருப்பதாக ஐ.ஜி கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை நகரின் மாரியம்மன் கோயில் 10வது தெருவில் இருந்த ஏடிஎம்மில் தீ பற்றி எரிவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருடன் வந்து ஏடிஎம்மில் எரிந்த தீயை அணைந்த காவல்துறையினருக்கு ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதேபோல மாவட்டம் முழுவதுமிருந்து 4 வெவ்வேறு இடங்களிலிருந்து காவல்துறையினருக்கு ஏடிஎம் தீப்பற்றி எரிவதாக புகார் வந்தது.
இந்த நான்கு ஏடிஎம்களும் உடைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதனையடுத்துதான் இது திட்டமிட்ட கொள்ளை சம்பவம் என்று தெரிய வந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியதில் கேஸ் கட்டர் கொண்டு ஏடிஎம் உடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தங்கள் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்திற்கு தீ வைத்துள்ளனர். இதில் கேமிரா மற்றும் ஹார்ட் டிஸ்குகள் சேதமடைந்துள்ளன.

பேட்டி
இந்த கொள்ளை சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்ட ஐ.ஜி கண்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, "இன்று விடியற்காலையில்தான் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வகை ஏடிஎம் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கேஸ் கட்டர் பயன்படுத்தி வெல்டிங் செய்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர். விசாரணை தற்போது தொடக்க நிலையில் இருக்கிறது. இந்த கொள்ளையை பார்க்கும்போது கொள்ளையர்கள் ஒரு கும்பலாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

வெளிமாநிலத்தவர்கள்
எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை. இது குறித்து விசாரிக்க திருவண்ணாமலையில் மட்டும் 5 தனிப்படைகளும் மற்ற மாநிலங்களுக்கு 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு ஒரு எஸ்பி சென்றிருக்கிறார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு எந்த மாதிரியான பாதுகாப்பு குறைப்பாடுகள் துணை போயுள்ளன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். முன்பு ஏடிஎம் மையத்திற்கு காவலாளிகள் இருந்தார்கள். தற்போது பாதுகாப்பு கேமிரா இருப்பதால் காவலாளிகளை பாதுகாப்புக்கு வைப்பது குறைந்திருக்கிறது. இந்கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு ஏடிஎம் இயந்திரம் குறித்து தெளிவாக தெரிந்திருக்கிறது.

ஏடிஎம் மெக்கானிக்
மிகச்சரியாக சொல்வதெனில் இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஏடிஎம் மெக்கானிக்குகளாக கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த கொள்ளையில் சுமார் ரூ.70 லட்சம் வரை பணம் பறிபோயுள்ளது. இதேபோன்ற கொள்ளை சம்பவங்கள் மகராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்திருக்கிறது. இந்த கொள்ளைக்கும் இதற்கு முன்னர் சென்னையில் நடந்த ஏடிஎம் கொள்ளைக்கும் பெரிய தொடர்பு இல்லை. அந்த பாணியிலான கொள்ளை வேறு, இந்த பாணி கொள்ளை வேறு. திருவண்ணாமலை நகரை பொறுத்த அளவில் தேவையான அளவு சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிசிடிவி
இதிலிருக்கும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம்" என்று ஐ.ஜி கண்ணன் கூறியுள்ளார். முன்னதாக "ஒருவேளை இந்த கொள்ளை சம்பவத்திற்கு காவல்துறையினர் யாரேனும் துணை போயிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications