நாட்டுக்கோழியும்...ரூ.1,000 பணமும்... தீபாவளி பரிசு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.
திருவண்ணாமலை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கட்சி நிர்வாகிகளுக்கு நாட்டுக்கோழியும், ஆயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தனது தொகுதிக்குட்பட்ட 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு அளித்துள்ளார்.
இதனால் கலசபாக்கம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டம்
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் பணிபுரிபவர்கள் மற்றும் சார்ந்து உள்ளவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவது வாடிக்கையாகும்.

பண்டிகை பரிசு
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னிர்செல்வம், 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு நாட்டுக்கோழிகளையும், ஆயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

ஆலோசனை
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சி கிராமத்தில் கடந்த வாரம் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர் இந்த ஆண்டு தீபாவளி பரிசாக என்ன வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார். சிலர் மொபைல் போன் வேண்டும் எனவும், சிலர் பணம் வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

மொபைல் செட்
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் கேட்டது போலவே சிலருக்கு மொபைல் செட்டும், சிலருக்கு பாத்திரப்பொருட்களும், பலருக்கு நாட்டுக்கோழியும், பணமும் வழங்கினார் எம்.எல்.ஏ.பன்னீர்செல்வம். இதனால் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் குஷியாக தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆதாயம்
இதனிடையே ஆதாயமில்லாமல் எம்.எல்.ஏ.பரிசுப் பொருட்களை வழங்கவில்லை என்றும், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால் இப்போதே கட்சியினரை தன் பக்கம் இழுத்து வைக்கும் முயற்சி எனவும் எம்.எல்.ஏ.பன்னீர்செல்வத்தின் எதிர்கோஷ்டியினர் விமர்சிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications