கரும்சாரை பாம்பு திருவண்ணாமலைக்கு வந்து.. நிழற்கூடத்தில் 5 அடி விஷப்பாம்பு தந்த சூப்பர் சர்ப்ரைஸ்
திருவண்ணாமலை: பாம்பு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. வனப்பகுதிகளையும் தாண்டி, குடியிருப்பு பகுதிகளுக்குள்ளேயே பாம்புகள் புகுந்து விடுவது தொடர்கதையாகி வருகின்றன.. அந்தவகையில், திருவண்ணாமலை, ராசிபுரம் பகுதிகளில் சமீபத்தில் பாம்புகள் வீடுகளுக்குள்ளும் பொதுமக்கள் நிறைந்த இடங்களுக்கும் புகுந்ததால் அச்சம் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது?
பொதுவாக ஈரப்பதம், நீர் சொட்டுதல் மற்றும் நீர்க்கசிவு போன்றவை பாம்புகளை ஈர்க்கும். இவை குடிக்க தண்ணீர் தேவைப்படுவதால், ஈரமான இடங்களை அவர்கள் மறைவிடமாக பயன்படுத்துகின்றனர்.

இதனால் கிட்சன், பாத்ரூம், பாத்திரம் கழுவும் சிங்க்கின் கீழ் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்..
குளிர்காலம், மழைக்காலம்
அதே நேரத்தில் குடிநீர் தொட்டிகளிலும் பாம்புகள் நீர் தேடி வருவது வழக்கமாகிறது. வெயில், காற்று மற்றும் இயற்கை சூழல் தாக்கத்தைத் தாங்க முடியாமல் வெளியேறும் பாம்புகள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களுக்கு அச்சத்தை உண்டாக்குகின்றன.
இந்த நிலையில், பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுவிட தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர்கள் உதவுகின்றனர். தீயணைப்பு துறையிடம் நவீன கருவிகள் உள்ளதால், பாம்புகளை விரைவாக பிடித்து பொதுமக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக விடுவிக்கலாம்.
ராசிபுரம் நிழற்கூடத்தில் பாம்பு
நேற்றைய தினம் திருவண்ணாமலை, ராசிபுரம் இந்த 2 இடங்களிலுமே பாம்புகள் புகுந்து அப்பகுதி மக்களுக்கு பீதியை தந்துவிட்டன..ராசிபுரம் பகுதியில் என்ன நடந்தது தெரியுமா?
நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், பொதுமக்கள் உட்காருவதற்கு வசதியாக நிழற்கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.. இந்த இடத்தில் நேற்று 5 அடி நீளமுள்ள பாம்பு ஊர்ந்து போயிருக்கிறது.. அந்த நிழற்கூடத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர், திடீரென பாம்பை பார்த்துவிட்டு அலறி சத்தம் போட்டார்.
விஷமுள்ள நல்ல பாம்பு
இதனால் அங்கிருந்த பொதுமக்களும், போலீசாரும் ஊர்ந்து செல்லும் பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாம்பை பிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால், அந்த நேரத்தில் அவர்களால் அது முடியவில்லை..
உடனே ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி பதுங்கியிருந்த பாம்பை மீட்டனர்... பிடிபட்ட பாம்பு, அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு என்பது அதற்கு பிறகுதான் தெரியவந்தது. அந்த பாம்பை பாதுகாப்பாக கொண்டுச்சென்று, அருகில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்..
கரும்புச்சாரை பாம்பு - 5 நீளம்
அதேபோல திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பிலும் இதே மாதிரியான சம்பவம் ஏற்பட்டது.
வன அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர்கள் இல்லாத போது, சுமார் 5 அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு வீட்டுக்குள் புகுந்துவிட்டது.. இது அருகிலிருந்தவர்களுக்கு பீதியை, கலக்கத்தை தந்துவிட்டது.. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்படவும், SSO முருகன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாம்பை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
இப்படியான நிகழ்வுகள் கோடை காலங்களில் பொதுவாக நேரிடும் என்றாலும், இப்போது குளிர்காலத்திலும் பாம்புகள் குடியிருப்புகளில் புகுந்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாம்புகளை காணும் பொழுது பொதுமக்கள் முயற்சிக்காமல், உடனடியாக தீயணைப்பு துறையினர் அல்லது பாம்பு பிடி வீரர்களை அழைப்பது முக்கியம் என்று வனத்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications