தலையில் இறங்கிய இடி.. தி.மலை, கடலூரில் சோகம்! வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களுக்கு நேர்ந்த கதி
திருவண்ணாமலை: வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் 5 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 5 பேர் இடி மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக இடி, மின்னல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, கழுதூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் பெண்கள் களை எடுக்கும் வேலை பார்த்து வந்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியிருக்கிறது. இதில் 4 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். அதேபோல திருவண்ணாமலை மாவட்டம் பத்தியவாடி கிராமத்தில் விளை நிலத்தில் கடலைபறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 முதல் 2500 பேர் வரை இடி, மின்னல் தாக்கி உயிரிழப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இயற்கை பேரிடர்களில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது இந்த இடி, மின்னல் பாதிப்புகள்தான். மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் திறந்த வழிகளில் வேலை பார்க்கும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆவார்கள். பருவமழை தொடங்கும் நேரத்தில் வயல்வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இடி, மின்னல் தாக்கி இவர்கள் உயிரிழக்கிறார்கள்.
மின்னல் வானத்திலிருந்து பூமியை நோக்கி பாயும் பொழுது உயரமான பொருட்கள் மீது தான் இறங்க பார்க்கும். எனவே வெட்ட வெளிகளில் ஒற்றை மரத்திற்கு கீழாகவோ அல்லது தனியாகவோ நின்று கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும்.
மின்னல் நேரடியாக மனிதர்களை தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், பக்கவாட்டு மின்னல் தாக்குதல் மற்றும் தரை மின்னோட்டம் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகளே அதிகமாக இருக்கின்றன. அருகில் உள்ள மரம் அல்லது இரும்பு கம்பிகளை தாக்கும் பொழுது அதன் பக்கத்தில் மனிதர்கள் இருப்பின் அவர்கள் மின்னல் தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதேபோல மின்னல் தரையை தாக்கிய பின்னர் அது நீர் நிலையாக இருப்பின் அதில் இருக்கும் மனிதர்களை மின்னல் தாக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படியும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கடலூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் இந்த வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வயல்வெளியில் நீர் தேங்கி இருக்கும். மின்னலானது வயல்வெளியில் பாயும்போது அந்த நீர் மூலமாக மின்சாரம் கடத்தப்பட்டு வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்கு பெண்களையும் தாக்கி இருக்க வாய்ப்புகள் அதிகம்.
மின்னல் தாக்கியவுடன் உடனடியாக இதயம் செயலிழந்து போய், அதன் துடிப்பு நின்று விடுகிறது. மட்டுமல்லாது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை, மின்னல் அழித்து விடுகிறது. அதேபோல மின்னல் கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துவதன் மூலமும் மரணங்கள் ஏற்படுகின்றன. மின்னல் இடி பாதிப்புகளில் இருந்து தப்பிக்க காண்கிரீட் வீடு அல்லது கட்டிடங்களுக்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் திறந்தவெளியில் நிற்கவோ ஒற்றை மரத்தின் அடியில் ஒதுங்குவோ கூடாது.
ஒருவேளை திறந்த வெளியில் இருந்தால், முழங்கால்களை மடக்கி தலையை குப்புற தாழ்த்தி குத்துகாலிட்டு உட்கார வேண்டும். கைகளால் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். ஆனால் தரையில் படுத்து விட கூடாது. ஏனெனில் இது மின்னல் தாக்கும் வாய்ப்பை அதிகரித்து விடும். இடி மின்னல் இருக்கும் நேரங்களில் ஜன்னல்களையோ, கதவுகளையோ திறப்பதை தவிர்க்கவும். குறிப்பாக பால்கனிகளில் நிற்க வேண்டாம். குளிப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற தண்ணீர் தொடர்புடைய வேலைகளை செய்ய வேண்டாம். ஏனெனில் மின்னல் பைப் வழியே கடத்தப்படவும் வாய்ப்புகள் அதிகம்.
மின்னல் ஒளியை கண்ட பின்னர் 30 எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்டால் மறைவிடங்களுக்கு சென்று இடி நின்றபின் 30 நிமிடங்கள் கழித்து வெளியே வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் இடி, மின்னல் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications