எந்த டோல்கேட்டிலும் சிக்காத ஹரியானா கொள்ளை கும்பல்.. ஷாக் டெக்னிக்.. வெளியான புதிய தகவல்
திருவண்ணாமலையில் எஸ்பிஐ ஏடிஎம் உள்பட 4 ஏ.டி.எம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளையடித்த ஹரியானா மாநில கும்பலின் வாகனம் எந்த சுங்கச்சாவடியையும் கடக்காமல் இருந்துள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் எஸ்பிஐ ஏடிஎம் உள்பட 4 ஏ.டி.எம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளையடித்த ஹரியானா மாநில கும்பலின் வாகனம் எந்த சுங்கச்சாவடியையும் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளதும, ராணிப் பேட்டை மாவட்டம் வழியாக சித்தூர் தப்பி சென்றதும் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 12ம் தேதி அதிகாலை திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் சுமார் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தம்மாம்பட்டு சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் அதே பாணியில் சுமார் 30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
போளூர் பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள எஸ்பிஐ ஏடிம் மையத்தில் இயந்தியரத்தை வெட்டி எடுத்து 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகையில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம்மிலும் வெல்டிங் மிசினை வைத்து உடைத்து 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தம் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

ஹரியானா கும்பல்
இந்த கொள்ளை சம்பவம் நடந்த நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நான்கு இடங்களிலும் கொள்ளை சம்பவம் நடந்த பின்னர் சிசிடிவி கேமராக்கள் மற்றும ஹார்ட் டிஸ்குகள் எரிந்திருந்தது. இதனால் கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சவால் ஏற்பட்டிருந்தது. கொள்ளை தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் திருவண்ணாமலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் 5 மாவட்ட எஸ்பிக்கள் அடங்கிய குழுவினர் கொள்ளை கும்பல் குறித்து விசாரித்ததில் ஹரியானா கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தை அரங்கேற்றியருப்பது தெரியவந்துள்து.

டாடா சுமோ
இந்நிலையில் கொள்ளை எப்படி நடந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல் துறை அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, ''கொள்ளை கும்பல் ஏ.டி.எம் மையங்களை முன்கூட்டியே கண்காணித்து வந்திருக்கிறார்கள். சரியாக பிளான் பண்ணியே கொள்ளை அடிக்கும் திட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டாடா சுமோ கோல்ட் காரில் முகத்தை மூடியபடி மங்கி குல்லா அணிந்த 6 பேர் கும்பல் வந்திருக்கிறார்கள்.

கடைசி கொள்ளை
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரமான அதிகாலை 1.19 மணிக்கு முதல் கொள்ளை அடிக்க ஆரம்பித்த கொள்ளையர்கள், அவளூர்பேட்டை ரோடு, கலசப்பாக்கம், போளூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் அடுத்தடுத்து ஷட்டரை இறங்கி மூடிவிட்டு, வெல்டிங் மிஷினை வைத்து இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கடைசி கொள்ளை நடந்தது போளூரில். அதை முடிக்கும் போது அதிகாலை 4.20 மணியாக இருந்திருக்கிறது. கொள்ளையை முடித்துவிட்டு அவர்கள் விரைந்து ஆந்திரா நோக்கி சென்றுள்ளனர்.

சித்தூர் பயணம்
கொள்ளையடித்தவர்கள், சுங்கச்சாவடி வழியாக சென்றால் பின்னாளில் மாட்டிக்கொள்வோம் என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயண வழியைமாற்றி உள்ளார்கள். அவர்கள் போளூரில் இருந்து தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றுள்ளார்களாம். வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்திருக்கிறது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் சென்றது தெரியவந்துள்ளது.

வாகன பதிவெண்
இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டுள்ள தனிப்படையினர் சுங்கச்சாவடி இல்லாத சாலைகளில் கொள்ளையர்களின் டாடா சுமோ கடந்து சென்றுள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் . கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் உண்மையா போலியா என்பது இதுவரை தெரியவரவில்லை. விரைவில் கொள்ளையர்களை விரைவில் நெருங்கிவிடுவோம் எனறு போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications