தேசூர் அருகே 7ஆம் நூற்றாண்டு கொற்றவை, பிள்ளையார் சிலை கண்டுபிடிப்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் அருகே 7 ம் நூற்றாண்டு கொற்றவை மற்றும் பிள்ளையார் சிலை கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து வந்தவாசி பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , தேசூரை அடுத்த சாத்தபூண்டி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிற்பம் ஒன்று இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.
தேசூர் - மழையூர் சாலையில் உள்ள சாத்தபூண்டி ஏரிக்கரையின் மேற்கு மூலையிலிருந்து தெற்காக சுமார் 500 மீட்டர் வயல்களின் ஊடே வரப்பில் நடந்து சென்றால் வெட்டவெளியில் ஒரு வரப்பில் பலகை கல்லினால் ஆன சிற்பம் காணப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது.

கைவளை
போர்வீரர்கள் அணியும் கவசம் தலையை அலங்கரிக்க , அதன் உச்சியில் உருளையான சிறு கொண்டையுடன் நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் குண்டலும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் கூர்மையான ஆரம் போன்ற அணிகலன்களையும் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார்.

கரம்
எட்டு கரங்களில் தனது மேல் வலது கரம் கதிர் அருவாளையும் ஏனைய வலது கரங்கள் முறையே வாள் , அம்பு ஏந்திய நிலையில் கீழ் வலக்கரம் எதையும் தாங்காமலும் , மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கைகள் முறையே வாள் , வில் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது.அனைத்து கைகளிலும் அடுக்கடுக்காக வளையல்கள் காட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

வலது புறம்
கொற்றவையின் இடையருகே வலது புறம் கிளியும் இடது புறம் கலைமானும் , காலருகே இருபக்கமும் வீரர்கள் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாரு காட்சி தருகிறது. வழக்கமாகப் பல்லவர் காலம் தொட்டு பிற்காலம் வரை கொற்றவை சிற்பங்களில் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் விஷ்ணு துர்க்கையாகக் காட்டும் வழக்கம் உள்ளது. இக்கொற்றவை சங்கு சக்கரம் ஏந்தாமல் சங்குடன் வேளாண் குறியீடான கதிர் அருவாளைச் சின்னமாக காட்டப்பட்டுள்ளது.

7ஆம் நூற்றாண்டு
சங்க காலம் முன்னர் தொடங்கி சங்கம் மருவிய காலம் வரையில் தமிழ்ப் பண்பாட்டில் நிலம் சார்ந்த கடவுளாகவும் , தாய் தெய்வமாகவும் , தொல்குடி வழிபாடாகவும் இருந்த கொற்றவை வழிபாடு பெருமளவில் மாற்றம் கண்டு ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பெருந்தெய்வ வழிபாட்டுடன் கலந்து இன்று துர்க்கையாக உள்ளது. இக்கொற்றவை சிற்பம் வேளாண்மை சின்னமான கதிர் அருவாள் மற்றும் சங்கைத் தாங்கியும் , போர்வீரர் அணியும் தலைக்கவசம் போன்ற தலைக்கவசமும் அணிந்து உள்ளதை வைத்தும் , ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

சிம்ம விஷ்ணு
எனினும் இப்பகுதியில் ஏற்கனவே ஆவணம் செய்யப்பட்டுள்ள 6 ம் நூற்றாண்டை சேர்ந்த சிம்ம விஷ்ணு காலத்திய நடுகற்களில் உள்ள சிற்பபமைதி மற்றும் அணிகலன்களின் தாக்கம் இக்கொற்றவை சிற்பத்தில் உள்ளது குறிப்பிடதகுந்தது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கொற்றவை இன்றும் வயல்வெளியின் மத்தியில் வெட்ட வெளியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். மேலும் இவ்வூருக்கு அருகே உள்ள கடம்பை என்னும் ஊரில் புதர்களுக்கு மத்தியில் பலகை சிற்பம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில் , அச்சிற்பம் பல்லவர்கால பிள்ளையார் சிற்பம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிற்பம்
நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் இச்சிற்பம் மிகவும் தேய்த்து உள்ளதால் மேல் இருக்கரங்களில் உள்ள ஆயுதங்கள் தெளிவாகத் தெரியவில்லை. கீழ் இருக்கரங்களும் தொடையின் மீது வைத்தவாறு பத்மாசன கோலத்தில் அமர்ந்தவாறு வடிக்கப்பட்டுள்ளார். நீளமான இருகாதுமடல்களுடன் , சிறிய துதிக்கை வலதுபக்கமாகச் சுருண்டும் உள்ளூர் கலைப்பாணியில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பபமைதியை வைத்து இதனை 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கி.பி 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பமாகக் கருதலாம்.












Click it and Unblock the Notifications