திருவண்ணாமலையில் தாயின் கண் முன்னே பெண் பலாத்காரம்.. காவலர்கள் டிஸ்மிஸ்.. ஆர்டிக்கிள் 311(2) என்ன?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திராவில் இருந்து தாயும், மகளும் தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கடந்த இரண்டு நாள் முன்பு இரவு மினி லாரியில் வந்து கொண்டிருந்தனர். திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகிய இருவரும் மினிலாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் விசாரணைக்கு அழைத்து செல்வதாக 18 வயது மகளை மட்டும் அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் காவலர்கள் இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை செல்லும் ரோட்டில் மொத்த காய்கறி மார்க்கெட் இருக்கிறது. இந்த மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் நள்ளிரவில் வந்திறங்கும். அந்த வகையில் ஆந்திராவில் இருந்தும் காய்கறிகள் தினமும் வருவது வழக்கம். ஆந்திராவில் இருந்து தாயும், மகளும் தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு வரும் மினி லாரியில் கடந்த இரண்டு நாள் முன்பு இரவு மினி லாரியில் வந்து கொண்டிருந்தார்கள்.

ரோந்து பணி
மினி லாரி, திருவண்ணாமலையில் உள்ள ஏந்தல் பைபாஸ் சாலையில் வந்துள்ளது. பொதுவாக இரவு நேரத்தில் வரும் வாகனங்களை ரோந்து போலீசார் சோதனை செய்வது வழக்கம். அதன்படி, அந்த பகுதியில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகிய இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இளம் பெண் பலாத்காரம்
காய்கறி ஏற்றி வந்த மினி லாரி போலீசார் சோதனை நடத்திய இடத்துக்கு வந்தபோது 2 போலீஸ்காரர்களும் அந்த மினி லாரியை நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என கேட்டு மறித்துள்ளார்கள் அப்போது அதில் வந்த தாயும், மகளும் காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி ஏற்றிச்செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் போலீஸ்காரர்கள் அவர்களை கீழே இறங்கும்படி கூறியிருக்கிறர்கள். மினி லாரியை அங்கிருந்து செல்லுமாறு அனுப்பிய காவலர்கள், தாயை மட்டும் விட்டுவிட்டு அவருடைய 18 வயது மகளை விசாரணை செய்ய வேண்டும் என கூறி தங்கள் இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அந்த 18 வயது பெண்ணை காமவெறி பிடித்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்களாம்.
மயங்கி கிடந்த பெண்
ஒரு கட்டத்தில் இததனை கண்ட அந்த பெண்ணின் தாயார் கூச்சலிட்டார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இதைப் பார்த்ததும் 18 வயது பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு 2 போலீஸ்காரர்களும் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்தப்பெண் மயங்கிய நிலையில் இருந்திருக்கிறார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எஸ்பியிடம் கதறல்
இது பற்றிய தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து அந்த பெண், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
காவலர்கள் கைது
இந்த நிலையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இது வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த போலீஸ் டி.ஐ.ஜி.தர்மராஜ் சம்பவம் நடந்த இடத்திலும், மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவலர்கள் டிஸ்மிஸ்
ரோந்து சென்ற காவலர்கள் இளம்பெண்ணை அதுவும் தாயுடன் வந்தவரை அவரது கண்ணெதிரிலேயே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருவண்ணாமலையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்க எழுந்தது. இந்நிலையில் காவலர்கள் டி சுரேஷ்ராஜ் மற்றும் பி சுந்தர் ஆகியோரை, அரசியலமைப்புச் சட்டத்தின் 311வது பிரிவைப் பயன்படுத்தி தமிழ்நாடு காவல்துறை பணிநீக்கம் செய்திருக்கிறது.
ஆர்டிக்கிள் 311(2)
ஆர்டிக்கிள் 311(2)-ன் கீழ் விசாரணையை நடத்தாமல் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. காவலர் ஒரு குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்று, அதன் அடிப்படையில் பணிநீக்கம் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரியால் (பணிநீக்கம் செய்ய அதிகாரம் பெற்றவர்), எழுத்துப்பூர்வமாகக் காரணங்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று திருப்தி அடைந்தால் பணி நீக்கம் செய்ய முடியும். குற்றத்தின் தன்மை கருதி காவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இனி அவர்கள் காவலர்கள் கிடையாது.












Click it and Unblock the Notifications