ரவுண்ட் அடிக்கும் ட்ரோன்கள்.. திருவண்ணாமலையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு! குழந்தைகள் பத்திரம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தமிழ்நாடு காவல் துறை பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு இருக்கிறது.
2023 ம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு காவல்துறை தரப்பில் குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்தை சீர் செய்ய 14,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரின் உத்தரவின் அடிப்படையில் குற்றச் செயல்களை கண்காணிக்க 10 ட்ரோன் கேமராக்களும், 50 க்கும் மேற்பட்ட CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன மேலும் பக்தர்களுக்கு வசதியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், குற்றச் செயல்களை கண்காணிக்க 10 ட்ரோன் கேமராக்கள். திருட்டு, கொள்ளை குறித்து 10 இடங்களில் LED Screen மூலம் விழிப்புணர்வு காணொளி திரையிடப்படுகிறது. காணாமல் போன குழந்தைகளை கண்டறிய 35,000 கை பட்டைகள் வழங்கப்பட உள்ளன. தலைமையக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க 19 இடங்களில் 50 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
தகவல் தொடர்பினை மேம்படுத்த கூடுதலாக 4 செல்போன் டவர்கள் மற்றும் 7 மொபைல் இண்டர்செப்டார் கருவிகள் பொறுத்தப்பட்டு உள்ளன. பக்தர்களின் சேவைகளுக்காக காவலர்கள் எளிதில் புலப்பட 50 இடங்களில் 4 அடி உயரம் கொண்ட உயர் மேடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கார்களை நிறுத்துமிடம் குறித்து அறிந்திட ன்புஷ் மெசேஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. தீபத் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் வசதியை கருத்தில்கொண்டு வேலூர் சாலை, ஆவலூர்பேட்டை சாலை, திண்டிவனம் சாலை, வேட்டவலம் சாலை, திருக்கோவிலூர் சாலை, மணலூர் பேட்டை சாலை, தண்டராம்பட்டு சாலை, செங்கம் சாலை, காஞ்சி சாலைகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை நகரத்தை சுற்றி உள்ள கார் நிறுத்தும் இடங்களை எளிதில் கண்டறிய https://tvmpolicedeepam2023.com/ என்ற வளைதளத்தையும், மேலும் காவல் அவசர உதவிக்கு 044-28447703, 044 - 28447701 மற்றும் 8939686742 ஆகிய எண்களையும், குழந்தைகள் காணாமல் போவது சம்மந்தமான உதவிக்கு 9342116232, 8438208003 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications