திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளை... கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேர் ஹரியானாவில் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் அடுத்தடுத்து ஏ.டி.எம்.களில் கொள்ளை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உள்ள தேனிமலை மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்களிலும் , போளூரில் ரெயில் நிலையம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம்., கலசபாக்கத்தில் உள்ள ஒன் இண்டியா வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும் கொள்ளை நடைபெற்றது.

9 சிறப்பு குழுக்கள்
ஏ.டி.எம். மையங்களில் இருந்த பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த கொள்ளை சமப்வம் ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்படது. இந்தக் குழுவில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும், 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளும் இடம் பெற்றுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார்.

அலாரத்தை செயல் இழக்க வைத்து
கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஏடிஎம் மையங்களில் இருந்த பணம் எடுக்கும் இயந்திரங்கள் ஒரே மாதிரியானவை. இந்த இயந்திரங்களை கையாளும் தொழில் நுட்ப அறிவு பெற்றவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏடிஎம்மில் உள்ள அலாரத்தை செயல் இழக்க வைத்து துல்லியமாக கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல்வேறு தடயங்கள் கிடைத்தது.

விடுதியில் தங்கியிருந்து..
அறிவியல் ரீதியான தடயங்களை வைத்து கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், குஜராத் மாநிலம் வதோதரா, ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியிலும் போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் ஹரியானாவை சேர்ந்த குற்றவாளிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கோலார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து கண்காணித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டு இருந்திருக்கிறது.

2 பேரையும் கைது செய்த போலீஸ்
போலீஸ் நெருங்கியதை அறிந்து பெங்களூரில் இருந்து விமானத்தின் மூலம் ஹரியானாவிற்கு கொள்ளை கும்பல் தப்பிச்சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. ஹரியானாவில் கைதான இருவரையும் விமானம் மூலமாக தனிப்படை போலீஸ் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications