பூட்டிய வீட்டில் பூஜை..3 நாட்களாக திறக்காத கதவு..ஆரணி அருகே நரபலி வதந்தி.. இடித்து திறந்த போலீஸ்
திருவண்ணாமலை: ஆரணி அருகே 3 நாட்களாக கதவை பூட்டிக்கொண்டு பூஜை செய்ததால் பதற்றம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் கூறினர். போலீசார் கதவை உடைத்துக்கொண்டு போய் வீட்டிற்குள் இருந்தவர்களை கைது செய்தனர்.
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டு இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தர்மபுரியை சேர்ந்த பத்மா, ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லின் ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரவாதி முகம்மது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை 12 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

பூட்டிய வீட்டில் பூஜை
இந்த நிலையில் ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கதவை பூட்டிக்கொண்டு பூஜை செய்தது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கதவை தட்டினர். வீட்டிற்குள் இருந்தவர்கள் பதில் அளிக்க மறுக்கவே ஜேசிபி இயந்திரம் மூலம் கதவை உடைத்து போலீசார் வீட்டிற்குள் புகுந்தனர். எனினும் வீட்டிற்குள் இருந்து யாரும் வெளியே வர மறுத்து விட்டனர்.

நடந்தது என்ன?
ஆரணி அருகே உள்ள கிராமத்தில் தவமணி காமாட்சி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மகள் கோமதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கோமதிக்கு தற்போது பேய் பிடித்திருப்பதாக கூறப்பட்டது.

சூனியம் அகற்ற பூஜை
தவமணி குடும்பத்தினர் யாரோ தங்களுக்கு சூனியம் வைத்து விட்டதாகவும் அதனை எடுக்க காளி பூஜை செய்வதாகவும் கூறி கதவை பூட்டிக்கொண்டனர். மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

நரபலி வதந்தி
வீட்டிற்குள் நரபலி கொடுப்பதாக தகவல் பரவவே ஏராளமானோர் அந்த வீட்டின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னரே காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் தவமணி வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.

கதவு உடைப்பு
குருபாலன் , பாலாஜி, தவமணி, காமாட்சி, கோமதி, கோமதியின் கணவர் ஆகியோர் வீட்டிற்கு இருந்து வர மறுத்தனர். இதனையடுத்து போலீசார் கதவை உடைத்தனர். அதற்கு குருபாலான், பாலாஜி ஆகியோர் போலீசில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்றும் எங்களுக்கு வைத்த சூனியத்தை தான் எடுக்கிறோம் என்றும் போலீசில் கூறினர். நரபலி கொடுப்பதாக பரவிய வதந்தி ஆரணி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications