திருவண்ணாமலைக்கு பௌர்ணமி கிரிவலம் போறீங்களா? சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம்.. விவரம் இங்கே!
திருவண்ணாமலை: பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் உள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். அந்தவகையில் நாளை பவுர்ணமியை ஒட்டி சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு பேருந்துகள்: புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "நாளை (17.09.2024) பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை (17/09/2024) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 300 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 15 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
புரட்டாசி பௌர்ணமி ஸ்பெஷல்: மேலும், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை, 175 பேருந்துகள் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தச் சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்: அதேபோல, திருவண்ணாமலையில் புரட்டாசி பௌர்ணமிக்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. நாளை (செப்டம்பர் 17) காலை 9.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) புறப்படும். திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு முற்பகல் 11 மணிக்கு வந்து சேரும்.
அதேபோல நாளை பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) புறப்படும். இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். நாளை இரவு 9.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06131) புறப்படும். இந்த சிறப்பு ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.
அதேபோல செப்டம்பர் 18 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06132) புறப்படும். இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications