திருவண்ணாமலையில் சிக்கிய அன்னபூரணி.. மலையுச்சியில் திருதிருனு விழிக்க.. வனக்காவலரின் சபாஷ்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபம் திருநாளில் நடந்த சம்பவம் ஒன்று இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. இது தொடர்பாக, வனக்காவலர் ஒருவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சோஷியல் மீடியாவில் குவிந்து கொண்டிருக்கிறது. என்ன காரணம்?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்..

இப்படிப்பட்ட சூழலில்தான், திருவண்ணாமலையில் சமீபத்தில் மண்சரிவு ஏற்பட்டுவிட்டது. வெவ்வேறு இடங்களில் 3 முறை மண் சரிவு ஏற்பட்டதில், 7 பேர் உயிரிழந்தனர். மலையில் பல இடங்களில் மண் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், மலை வழுவழுப்பாகவே காணப்பட்டது... அதனால், மகா கார்த்திகை நாளில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுமா? மக்கள் கிரிவலம் செல்லமுடியுமா? என்று பல கேள்விகள் பக்தர்களிடம் எழுந்தன.
கிரிவலம்: இதையடுத்து, திட்டமிட்டப்படி இந்தாண்டு மலையில் தீபம் ஏற்றப்படும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டதுடன், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. அதாவது, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இதையடுத்து, கடந்த 13-ந் தேதி மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல், நேற்று முன்தினம் மாலை வரை பவுர்ணமி என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. மகாதீபம், பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
அனுமதி மறுப்பு: இப்படிப்பட்ட சூழலில், திருவண்ணாமலை மகாதீபத்தின்போது ஆந்திராவை சேர்ந்த அன்னபூரணி என்ற பெண், அத்துமீறி மலை மீது ஏறியுள்ளார்.. ஏற்கனவே பொதுமக்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த பெண் மலையில் ஏறியிருக்கிறார்.. ஆனால், அவரால் மறுபடியும் திரும்பி வர தெரியாமல், கடந்த 2 நாட்களாகவே திருவண்ணாமலை மலை மீதே தவித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் இருப்பிடத்தை கண்டுபிடித்த வனக்காப்பாளர்கள், அங்கு சென்று அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
ஆனால், கடந்த 2 நாட்களாக மலையில் சிக்கி கொண்டதால், அன்னபூரணியால் மலையிறங்க முடியவில்லை.. மிகவும் சோர்வாக காணப்பட்டார்.. அவரால் நடக்கவும் முடியவில்லை. அதனால், அன்னபூரணியை வனக்காப்பாளர் ஒருவர் தன்னுடைய முதுகில் சுமந்துக்கொண்டு, மலைக்கு கீழே கொண்டு வந்து பத்திரமாக சேர்த்தார்.. வழியெல்லாம் கற்களும், பாறைகளும், செடி கொடிகளும் நிறைந்திருந்தன. அவைகளை ஒருகையால் விலக்கி விட்டபடியே, அன்னபூரணியை முதுகில் சுமந்து வந்தார்.
பாராட்டு: வனக்காப்பாளரின் இந்த செயலை கண்டு, அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர். தற்போது இந்த செயல் சோஷியல் மீடியாவிலும் பரவிவருவதால், பொதுமக்களும், வனக்காப்பாளருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். அன்னபூரணியை வனக்காப்பாளர் முதுகில் சுமந்து மலையிறங்கி வரும் காட்சி, வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications