10 ரூபாய் நாணயத்திற்கு மீண்டும் வந்த சத்திய சோதனை.. திருவண்ணாமலை கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை : 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று பலமுறை அறிவித்துவிட்டது ரிசர்வ் வங்கி, மத்திய அரசும் பலமுறை வதந்திகளுக்கு விளக்கம் தந்துவிட்டது. 10 ரூபாய் நாணயம் எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லை, செல்லும் என்று அறிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டதிலிருந்தே அவ்வப்போது, இந்த நாணயங்களை வாங்க மறுக்கும் சம்பவங்கள் பல ஊர்களில் நடந்து வருகிறது. யாரோ சிலர் பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் பரப்பிய வதந்தியால், இந்தியா முழுவதுமே 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மக்கள் தயங்கும் நிலை ஏற்பட்டது.இந்த போக்கு மிக கடுமையா அதிகரிப்பதை தடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது.

10 ரூபாய் நாணயம் செல்லும் என்றும், மக்கள் பயமின்றி அதை வைத்து பணப் பரிமாற்றம் செய்யலாம் என்று விளம்பரம், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு மூலமாக பல வழிகளில் விழிப்புணர்வு செய்தது. த்து ரூபாய் நாணயம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் குறித்து தெளிவு பெற '14440' என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தல், வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து விளக்கம் அளிக்கும் நடைமுறையையும் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர் படிப்படியாக மக்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க தொடங்கினார்கள். சென்னை உள்பட பல மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுகிறது. எந்தபிரச்சனையும் இல்லை.. ஆனாலும் வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் இன்னமும் 10 ரூபாய் நாணயம் குறித்து அச்சம் நிலவுகிறது. பலரும் வதந்தியை உண்மை என்று நம்பி வாங்க மறுக்கிறார்கள்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் புழக்கத்தில் 10 ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருக்கிறது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பொது மக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது. பல கிராமங்களில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு அரசால் அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என கூறுவதோ, அதனை பண பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்து வகையிலும் செல்லத்தக்கது. பொதுமக்களை அலைக்கழிப்புக்கு ஆளாக்காமல் கடை உரிமையாளர்கள் 10 ரூபாய் நாணயங்களை அனைத்து பரிவர்த்தனைக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications