திருவண்ணாமலையில் 2 கால்களுடன் அசத்தும் அதிசய ஆடு.. சங்கர் வீட்டில் ஒரே கூட்டம்! இதுதான் தன்னம்பிக்கை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நடந்த ஒரு சம்பவம், தன்னம்பிக்கை இருந்தால் எந்த குறையும் தடையல்ல என்பதை கண்முன் நிறுத்த செய்துள்ளது... தன்னுடைய குறைபாட்டை ஒரு பொருட்டாக கருதாமல், பின்னங்கால்களைப் பயன்படுத்தி நேராக நின்று நடக்கும் ஒரு அதிசய ஆடுதான், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. இந்த ஆட்டை பார்ப்பதற்காக சங்கர் வீட்டில் தினமும் சுற்றுவட்டார மக்கள் குவிகிறார்களாம்...!!
பொதுவாக 2 கால்களுடன் , 6 கால்களுடன், 8 கால்களுடன் ஆடுகள் பிறப்பது மிகவும் அரிதான விஷயம். இதற்கு முக்கிய காரணம் கருவில் இருக்கும் போதே வளர்ச்சி சரியாக நடைபெறாதது தான் என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

திருவண்ணாமலை அதிசய ஆடு
கர்ப்ப காலத்தில் குட்டி உருவாகும் போது, அதன் உடல் உறுப்புகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் நேரத்திலும் வளர வேண்டும். அந்த சமயத்தில் மரபணு மாற்றம் ஏற்படலாம். அல்லது தாயாட்டுக்கு ஊட்டச்சத்து குறைவு இருக்கலாம்..
சில நேரங்களில் வைரஸ் தொற்று அல்லது விஷப் பொருட்களின் தாக்கம் இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் கால்கள் முழுமையாக உருவாகாமல் போகும்... சில ஆடுகளில் அருகில் உள்ள உறவுகளுக்குள் இணைப்பு நடந்தாலும் இப்படிப்பட்ட பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்..
2 கால்கள் - தன்னம்பிக்கை
கால்களுடன் ஆடு பிறப்பது இயற்கையில் அரிதாக ஏற்படும் பிறப்பு குறைபாடு என்றே கருதப்பட்டாலும் சிலர் இதை தெய்வாதீன செயலாகவும் கருதுகிறார்கள்.. சில ஆடுகள் முன்னங்கால்கள் இல்லாமல் பின்னங்கால்களில் மட்டும் எழுந்து நடப்பதுண்டு.. இப்படி குறையுள்ள ஆடுகள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது.. சில நேரங்களில் பிறவிக் குறைபாடுகளுக்கு சரியான பராமரிப்பு மற்றும் கால் சிகிச்சை மூலம் தீர்வு காணவும் முடிகிறது..
இப்படிப்பட்ட சூழலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு ஆச்சரிய நிகழ்வு நடந்துள்ளது.. வந்தவாசி அடுத்த சூரிய தாங்கள் கிராமத்தில், ஊனமாகப் பிறந்த ஒரு குட்டி ஆடு, இன்று அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இரண்டு கால்களுடன் தன்னம்பிக்கையோடு நடந்து வருகிறது.
சூரிய தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெள்ளை ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வந்த ஒரு வெள்ளை ஆடு சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது.
வந்தவாசி சங்கர் வீடு
அதில் ஒரு குட்டி, பிறந்தபோதே இரண்டு கால்கள் செயல்படாத நிலையில் ஊனமாக இருந்தது. இதனால் அந்த குட்டி உயிர் வாழுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் இயற்கையின் சோதனையை தைரியமாக எதிர்கொண்ட அந்த குட்டி ஆடு, மனம் தளராமல், மீதமுள்ள இரண்டு கால்களை மட்டுமே நம்பி மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது.
நாளுக்கு நாள் அந்த ஆட்டின் நடை தைரியமாக மாறி, இன்று அது எந்த உதவியும் இல்லாமல் இரண்டு கால்களுடன் நம்பிக்கையோடு நடந்து செல்கிறது. மற்ற ஆடுகளைப் போலவே துள்ளி குதித்து ஓடி விளையாடி கொண்டிருக்கிறது... இதைப் பார்க்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடனும், கண்களில் நெகிழ்ச்சியுடனும் அந்த ஆட்டைக் கண்டு வருகிறார்கள்.
"தன்னம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம்" என்பதற்கு உயிரோடு நிற்கும் உதாரணமாக, இந்த குட்டி ஆடு இன்று சூரிய தாங்கள் கிராமத்தில் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையின் சின்னமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications