மெரினா பீச்சை பார்த்து வியந்த பிரிட்டன் சுற்றுலா பயணி! "ரொம்ப சுத்தமா இருக்கு" பாராட்டி தள்ளி வீடியோ
சென்னை: சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி, மெரினா பீச்சிற்கு சென்றுள்ளார். மெரினா இந்தளவுக்குச் சுத்தமாக இருக்கும் என்பதைத் தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை எனச் சொல்லி வியக்கும் அவர், உலகின் 2வது மிகப் பெரிய கடற்கரை இவ்வளவு சுத்தமாக இருப்பது தனக்கு ஆச்சரியத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா குறித்துப் பல நாடுகளில் தவறான பிம்பம் பரவி இருக்கும் சூழலில், இதுபோல வெளிநாட்டினர் வந்து தான் அந்த பொய்களை உடைக்க வேண்டி இருக்கிறது. அப்படி தான் சென்னை கடற்கரை குறித்து பிரிட்டன் சுற்றுலாப் பயணி பகிர்ந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பிரிட்டன் சுற்றுலா பயணி
இந்த ஜாக் ஹீட்டன் ஒரு டிஜிட்டல் கிரியேட்டர். தற்போது இந்தியா முழுவதும் பயணம் செய்து வரும் இவர், தனது அனுபவங்களை வீடியோவாக பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்திருந்தபோது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சிகள், இந்தியா பற்றி இணையத்தில் பரப்பப்படும் தகவல்களுக்கு முற்றிலும் மாறாக இருப்பதாகக் கூறுகிறார்..
சுத்தமான பீச்
"சமூக வலைத்தளங்கள் இந்தியா பற்றி என்னிடம் முழுமையாகப் பொய் சொல்லிவிட்டன" என்ற தலைப்பில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டார். அதில் மெரினா கடற்கரை மிகவும் சுத்தமாக இருப்பதாகவும், அங்குக் குப்பைகளே இல்லை என்றும் அவர் ஆச்சரியத்துடன் கூறினார். பொதுவாக இந்தியாவில் பொது இடங்கள் அசுத்தமாக இருக்கும் என்ற பிம்பத்தை இந்த வீடியோ தகர்த்துள்ளது.
குப்பைகளே இல்லை
அவர் மேலும், "இது இந்தியா என சொன்னால் நம்ப முடிகிறதா.. இதுதான் உலகின் 2வது மிகப் பெரிய கடற்கரை.. எவ்வளவு சுத்தமாக இருக்கிறது பாருங்கள்.. இங்கே சுமார் 10,000 பேர் இருக்கிறார்கள். இவ்வளவு மக்கள் இருந்தும் கடற்கரையில் குப்பைகள் மிகக் குறைவாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. இந்த நீர் இங்கிலாந்து கடற்கரைகளில் இருப்பதை விட சுத்தமாக இருக்கிறது. இது மாலத்தீவு போல பளிங்கு போன்ற நீல நிறத்தில் இல்லை என்றாலும், நிச்சயமாக மோசமானதாக இல்லை" என்று ஒப்பிட்டுப் பேசினார்.
அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் இந்த வீடியோவை பதிவிட்டு சில மாதங்கள் ஆகியிருந்தாலும் இப்போது தான் அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் இவரது வீடியோவை லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள். மேலும், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன்கள்
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இந்தியாவைப் பற்றி தவறான அல்லது நெகடிவ் வீடியோக்களைப் போட்டால் மட்டுமே அதிக வியூஸ் கிடைக்கும் என்பதால், பலர் திட்டமிட்டே அப்படிச் செய்கிறார்கள்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "சென்னை உங்களுக்குப் பிடித்தது என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளனர்.
மற்றொரு நபர் மெரினாவில் கடல் நீர் ஏன் நீலமாக இல்லாமல் பச்சை நிறமாக இருக்கிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர், "வங்காள விரிகுடாவில் அதிக அளவு நன்னீர் கலப்பதாலும், அங்கு அதிகப்படியான பிளாங்க்டன்கள் இருப்பதாலும் நீர் பச்சை நிறமாகத் தெரிகிறது" என்று அவர் விளக்கியுள்ளார்.
இந்தியா
இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கே சில குறைகள் இருந்தாலும், அழகான மற்றும் பாசிட்டிவ் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. சிலர் வேண்டும் என்றே வியூஸுக்காக பொய்யான கருத்துகளை பரப்புகிறார்கள். அதேநேரம் ஜாக் ஹீட்டன் போன்ற பயணிகளின் இந்த வீடியேக்கள், உலக அரங்கில் இந்தியாவின் உண்மையான மற்றும் அழகான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications