திருவண்ணாமலையில் திகைப்பு.. 21 வயசு ரோஷினிக்கு இப்படியா நடக்கணும்.. ஆசை ஆசையாக காதலித்தாரே இளைஞர்?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை.. 2வது நாளாக சம்பந்தப்பட்ட குற்றவாளி சக்திவேலிடம் விசாரணை நடந்து வருகிறது.. இதனிடையே, சம்பவம் இடத்துக்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். யாரிந்த ரோஷினி? என்ன நடந்தது? இது சம்பந்தமான கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே பாடகம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் 21 வயது ரோஷினி, போலீஸ் பணியில் சேருவதற்காக, தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.. இதே பயிற்சி மையத்தில் சக்திவேல் என்ற 29 வயது இளைஞரும் படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

போளூர் ஸ்டேஷனில் சரண்
இந்நிலையில், நேற்று முன்தினம் 8 மணிக்கு பயிற்சி மையத்திலிருந்து ரோஷினியும், சக்திவேலும் வீட்டிற்கு நடந்து சென்றபோது, பாடகம்-மன்சூராபாத் சாலையில் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சக்திவேல், ரோஷினியை தாக்கி, அங்கிருந்த கிணற்றிலும் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, போளூர் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் சரணடைந்தார்.
போலீசாரிடம் சக்திவேல் "நாங்கள் காதலித்து வந்தோம். ரோஷினிக்கு வீட்டில் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கிவிட்டார்கள். அதனால், உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன். ஆனால், ரோஷினி மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் சண்டை வலுத்தது. ஆத்திரத்தில் ரோஷினியை கன்னத்தில் அறைந்துவிட்டேன். இதனால் ரோஷினி, அங்கிருந்த கிணற்றில் ஓடிச்சென்று குதித்துவிட்டார்" என்றார்..
சந்தேகம் - போஸ்ட் மார்ட்டம்
இதையடுத்து, இந்த வழக்கு, போளூர் போலீசார் மூலம் மங்கலம் போலீசார் கையில் எடுத்தனர். சம்பந்தப்பட்ட கிணற்றில் ரோஷினியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர். அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், விசாரணை சக்திவேலிடம் துரிதமாகும் என்கிறார்கள். இது குறித்த கூடுதல் தகவல்களும் தற்போது வெளியாகியிருக்கின்றன.
அதாவது ரோஷினியும், சக்திவேலும், 2 வருடங்களாக காதலித்து வருகிறார்களாம்.. இவர்களுக்குள் ஆரம்பத்திலிருந்தே சில விஷயங்களில் ஒத்துப்போகாமல் கருத்து வேறுபாடுகள் வந்துள்ளன.. இதனால், அவ்வப்போது தகராறும் ஏற்பட்டுள்ளது.
வெளிவந்த பகீர் தகவல்கள்
சில நாட்களுக்கு முன்பும் இப்படித்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால், சக்திவேலுவுடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டாராம் ரோஷினி.. பலமுறை சக்திவேல் வற்புறுத்தியும் ரோஷினி பேசவில்லை.
நேற்று முன்தினம் காலை ரோஷினி, கலசப்பாக்கத்திலுள்ள பயிற்சி அகாடமிக்கு படிக்க சென்றுள்ளார்.. அன்று மாலையில்தான், சக்திவேல், ரோஷினியிடம் தகராறு செய்துள்ளார்.. இதனிடையே, மாலையில் மகள் வீடு திரும்பாததால், போலீசில் பெற்றோர் புகாரளித்தனர். அதற்குள் சக்திவேலு போலீசில் சரணடைந்துவிட்டார்.
ரோஷினியின் சடலத்தை மீட்டபோது, அவரது தலையில் காயங்கள் காணப்பட்டன.. ஆனால், ரோஷினியை கன்னத்தில் அறைந்ததால், ஓடிச்சென்று கிணற்றில் விழுந்துவிட்டதாக சக்திவேல் கூறியிருந்தார்.. இதையடுத்து, தீவிர விசாரணை அவரிடம் நடத்தப்பட்டதில், ரோஷினி பேச மறுத்ததால், அவரது கழுத்தை நெரித்து கொன்று, சடலத்தை அந்த பகுதியில் கிணற்றில் வீசியதாக கூறியிருக்கிறார்.
ரோஷினியே ஓடிச்சென்று கிணற்றில் குதித்துவிட்டதாக போலீசாரிடம் கூறியிருந்த நிலையில், தற்போது தான்தான் அவரை கொன்று வீசியதாக இளைஞர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை குடும்பத்தினர் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications