திருவண்ணாமலை மாவட்ட குவாரிகளில் கனிமங்கள் எடுக்கும் வாகனங்கள்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, போளூர், ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, தண்டராம்பட்டு, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, ஜமுனாமரத்தூர் மற்றும் வெம்பாக்கம் ஆகிய தாலுகாக்களில் கல்குவாரி மற்றும் கிரானைட் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி பணி நடைபெற்று வருகிறது. இங்கு முறைகேடுகளை தடுக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாகனங்களில் கனிமங்களை ஏற்றிச் செல்ல வழங்கப்படும் நடைசீட்டு பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
சிறுவகை கனிமங்களான சாதாரண கற்கள், கிராவல், பலவண்ண கிரானைட் கற்கள் மற்றும் பெருங்கனிமமான சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுக்கு குவாரி மற்றும் சுரங்க குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி, சுரங்கப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்துச் செல்ல ஏதுவாக, குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் இசைவாணைச் சீட்டு இணையதளம் வழியாக வழங்கும் நடைமுறையானது கடந்த ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது.

வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதை தடுக்கவும், வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டை இணையதளம் வாயிலாக வழங்குவதற்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளில் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இந்த நடைமுறை குவாரிகள் அதிகம் உள்ள புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திருவண்ணமலை, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருவண்ணாமலை, போளூர், ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, தண்டராம்பட்டு, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, ஜமுனாமரத்தூர் மற்றும் வெம்பாக்கம் ஆகிய தாலுகாக்களில் கல்குவாரி மற்றும் கிரானைட் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி பணி நடைபெற்று வருகிறது.
வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்க மற்றும் அனுமதிக்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமங்களை ஏற்றி செல்வதை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைசீட்டு முறை இணையதளம் வாயிலாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குவாரி குத்தகைதாரர்கள் mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் நடைசீட்டு விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து இ-பெர்மிட் வழங்கப்படுகிறது.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட கல்குவாரி குத்தகைதாரர்களால் இ-பெர்மிட் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மேற்படி இ-பெர்மிட் முறையில் நடைசீட்டு வழங்கப்படுவதால் நடைசீட்டுகள் எளிமையாக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் கனிமங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு அனுமதித்த அளவைவிட கூடுதலாக கனிமங்கள் ஏற்றி செல்வது தடுக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications