பிரபல வெஜ் ஹோட்டல் சாம்பார் இட்லியில் மிதந்த புழு.. முறையிட்ட வாடிக்கையாளர்களை மிரட்டிய ஊழியர்கள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்த சாம்பார் இட்லியில் புழு கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் பிரபலமான ஹோட்டலின் ஒரு கிளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது. இந்த ஹோட்டலுக்கு நேற்று இரவு திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சச்சின் (25) மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ் (26) ஆகியோர் சாப்பிடச் சென்றுள்ளனர்.

ஹோட்டலுக்குச் சென்று 2 சாம்பார் இட்லி ஆர்டர் செய்துள்ளனர். கொண்டு வரப்பட்ட சாம்பார் இட்லியை இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சாம்பாரில் புழு கிடந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். நன்றாகச் சோதித்துப் பார்த்ததில் அது புழு என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, ஹோட்டல் ஊழியர்களிடம் இதுகுறித்து அவர்கள் கேட்டபோது, நாங்களும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் தான், பிரச்சனை செய்யாமல் அமைதியாகச் சென்று விடுங்கள் என்று மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர். மேலும், சத்தம் போட்டதால், அவர்களே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், சச்சின் மற்றும் வெங்கடேசனிடம் ஒரு மணி நேரத்திற்கும்m மேலாக சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசன், சாப்பிட்ட உணவை வாந்தி எடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்த சாம்பார் இட்லியில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஒருபுறம் என்றால், இதுகுறித்து முறையிட்ட வாடிக்கையாளர்களுக்கு முறையாக பதில் அளிக்காமல் மிரட்டும் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஊட்டியில் உள்ள பிரபல உணவகத்தில் சாம்பாரில் எலி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications