மிஸ் பண்ணிடாதீங்க! ஒரு முறையாவது அவசியம் போய் பாருங்க! மாணவர்கள் -இளைஞர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
திருவாரூர்: பள்ளி - கல்லூரி மாணவச் செல்வங்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள நீண்ட கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு;
''பள்ளி - கல்லூரி மாணவச் செல்வங்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் திருவாரூர் திருத்தலத்தில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும். நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் 80 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வை அறிந்திட வேண்டும்.

திருவாரூர் எப்படி இருந்தது, இன்று அந்த நகரம் மாவட்டத் தலைநகராக்கப்பட்டு, மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டதாக வளர்ச்சியடைந்திருப்பதற்கு காரணம் தலைவர் கலைஞர்தான் என்பதை கோட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள முடியும். கழக உடன்பிறப்புகள் தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது மட்டுமல்ல, நேரத்தை ஒதுக்கி ஒரு முறையேனும் கலைஞர் கோட்டத்தைக் காண வேண்டும்.
அந்த உத்வேகத்தைக் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நாளில் நானும் பெற்றேன். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் உரையாற்றியது போல, இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும். அதற்கான முன்னெடுப்பை பீகார் முதலமைச்சர் அன்பிற்குரிய நிதீஷ் குமார் மேற்கொண்டிருக்கிறார்.

ஜூன் 23-ஆம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை - ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது.
கலைஞருக்குக் கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம்.''












Click it and Unblock the Notifications