ஜேசிபி வாடகை பாக்கி ரூ.1.30 லட்சம்! பணத்துக்கு உரிமையாளரை அலையவிட்ட நகராட்சி ஆணையர்! கமிஷனில் குறி!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்குள், ஜேசிபி வாகன உரிமையாளர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர் கடன் பெற்று சொந்தமாக ஜே.சி.பி.வாகனம் ஒன்றை வாங்கி வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். அந்த வகையில் அவருக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் தனது ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார்.

அந்த வகையில் கடந்த 4 மாதமாக கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வாடகை வரவில்லை. இதனை பலமுறை கேட்டுப்பார்த்தும் நகராட்சி ஆணையர் சாக்கு போக்குகளை சொல்லி விஜயராகவனை அலையவிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல வாடகை பாக்கித் தொகையான ரூ.1.30 லட்சத்துக்கான காசோலையை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் தனக்கு கமிஷனாக ரூ.25,000 தர வேண்டும் எனவும் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கொதித்துப் போன ஜேசிபி வாகன உரிமையாளர் விஜயராகவன் தனது மனைவி மற்றும் குழந்தையோடு கூத்தநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறார். அப்போதாவது அந்த நகராட்சி ஆணையர் இது குறித்து அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அது போல் அவர் செய்யவில்லை.
இதனால் விரக்தியடைந்த விஜயராகவன் பையில் மறைத்து எடுத்துச் சென்றிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி நகராட்சி அலுவலகத்திற்குள்ளேயே தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த நகராட்சி ஊழியர் ஒருவர் பாய்ந்து சென்று விஜயராகவனை காப்பாற்றினார்.
எல்லாமே கமிஷனால் வந்த விணை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையருக்கு இதனால் சிக்கல் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications