எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தைப் போல தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சி.. சொல்கிறார் டெல்டா புள்ளி!
திருவாரூர் : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியைப் போல தற்போது எடப்பாடி பழனிசாமி காலத்திலும் அதிமுகவில் எழுச்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜெயலலிதா காவிரி உரிமையை மீட்டுத் தந்தது போல் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி என ஈபிஎஸ் ஆதரவாளரான காமராஜ் பேசியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக கடுமையான மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓபிஎஸ் பெயர், படங்களை புறக்கணித்து வருகின்றனர்.

சலசலப்பு
அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினர் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் போக்கு தீவிரமாக நிலவி வரும் சூழலில் , திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூரில் மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வையொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இடம்பெறாதது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் காமராஜ்
மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், "அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் பேசுகையில், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் அருமைக்குரிய அண்ணனாக 4 ஆண்டுகள் 2 மாதங்கள் பணியாற்றிய சிறப்பான தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று சொன்னால் அதில் மிகையில்லை. அவர் சிறப்பாக பணியாற்றினார். மக்கள் சொல்கிறார்கள், தொண்டர்கள் சொல்கிறார்கள், நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

அதிமுகவில் எழுச்சி
எடப்பாடி பழனிசாமி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அ.தி.மு.க இன்று எழுச்சிமிக்க இயக்கமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல், ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியைப் போல், அ.தி.மு.கவில் தற்போது எடப்பாடி பழனிசாமி காலத்திலும் எழுச்சி ஏற்பட்டு அதிமுக எழுந்து நிற்கிறது. அ.தி.மு.க.வில் யாரும் தன்னைத்தானே தலைவர்கள் என கூறிக் கொள்வதில்லை, ஒட்டுமொத்த மக்களாலும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள்.

எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.கவில் தனக்குப் பிறகு வரப்போகும் தலைவர் யார் என்பதை மக்களும், தொண்டர்களும் தான் முடிவு செய்வார்கள் என ஜெயலலிதா அன்று தெரிவித்த கருத்து இன்று அதிமுகவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்த மக்களாலும் இயக்கத்தின் நிர்வாகிகளாலும் போற்றப்படும் தலைவராக உருவாகி வருகிறார். ஜெயலலிதா காவிரி உரிமையை மீட்டுத் தந்தது போல் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications