குவைத்துக்கு சென்ற தமிழக இளைஞர்.. பணிக்கு போன 3 நாளில் சுட்டுக்கொலை.. முதலாளி வெறிச்செயல்.. பின்னணி
திருவாரூர்: குவைத்தில் வேலைக்கு சென்ற திருவாரூரைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞரை வேலைக்கு அமர்த்திய நபரே அவரை சுட்டுக் கொன்றிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவரது உடலை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட் முத்துக்குமரனுக்கு நீதிக்கேட்டு திருவாரூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் பறிபோன வேலை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா, லட்சுமணன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். டி.ஃபார்ம் பட்டதாரியான இவர் அங்குள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இதனிடையே, கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா ஊரடங்கால் அவரது வேலை பறிபோனது. இதையடுத்து, குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அவர் அங்கேயே ஒரு சிறிய காய்கறிக் கடையை வைத்தார். ஆனால் அதில் அவருக்கு போதிய வருமானம் வரவில்லை. இதன் காரணமாக, அவரது குழந்தைகளுக்கு கூட சரியாக பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

குவைத்தில் வேலை கிடைத்ததால் மகிழ்ச்சி
இதனால் வருத்தம் அடைந்த முத்துக்குமரன், வெளிநாடு சென்றாவது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, தனக்கு தெரிந்த வெளிநாட்டு ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு அவர் வேலை கேட்டு வந்தார். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனம் சார்பில் கடந்த மாதம் முத்துக்குமரனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், குவைத்தில் உள்ள நிறுவனத்தில் கேஷியராக அவருக்கு பணி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் மகிழ்ச்சி அடைந்த முத்துக்குமரன், தனது மனைவி மற்றும் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலை
இதையடுத்து, கடந்த 3-ம் தேதி அவர் குவைத்தின் அல் அகமது நகருக்கு சென்றார். ஆனால், அங்கு சென்றதும் தான் உண்மை நிலவரம் அவருக்கு தெரியவந்தது. அவரை அங்கிருந்த சில நபர்கள், ஒரு நிறுவனத்திற்கு கூட்டிச் சென்றனர். பின்னர் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்ட அவருடன் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளும் ஏற்பட்டன. இதுகுறித்து கேட்ட போது, ஆடு மேய்க்கவே உங்களை நியமித்திருக்கிறோம் என அவர்கள் கூறினர். பின்னர் சுட்டெரிக்கும் மதிய வேளையில், பாலைவனத்துக்கு முத்துக்குமரனை அழைத்துச் சென்ற அவர்கள், ஆடுகளை மேய்க்குமாறு கூறியுள்ளனர். கேஷியர் எனக் கூறி அழைத்து வந்து ஆடு மேய்க்க கூறுகிறார்களே என அவர் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். ஆனால், வேறு வழியின்றி அன்றைய தினம் அவர் ஆடுகளை மேய்த்திருக்கிறார்.

சுட்டுக் கொலை
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி முத்துக்குமரன் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என தனது முதலாளியிடம் கூறியதாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமரனை அவரது முதலாளி சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் குவைத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே,முத்துக்குமரனின் உடலை ஒப்படைக்க வேண்டும் என அவரது மனைவியும், பெற்றோரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும், குவைத்துக்கு வேலைக்கு சென்ற மூன்றாவது நாளே கொலை செய்யப்பட்ட முத்துக்குமரனுக்கு நீதிகேட்டும் திருவாரூரில் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்திலும், பேரணியிலும் ஈடுப்டடு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications