கோயில் நிலங்களுக்கு பட்டா கொடுத்தால் ஆக்ஷன் பாயும்! நீதிமன்ற உத்தரவால் நெருக்கடியில் முதல்வர் விஜய்
திருவாரூர்: கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க கூடாது என்றும், அப்படி மீறி வழங்கினால் அமைச்சர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று சென்னை உயர்நீதின்றம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை டெல்டா மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் இந்த விஷயத்தில் மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
கோயில் நிலம் தொடர்பான வழக்கு ஒன்று நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த எச்சரிக்கையை கொடுத்திருக்கின்றனர்.

யார் ஆக்கிரமிப்பாளர்கள்?
தமிழ்நாட்டில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் என ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்தான் அதிக அளவில் கோயில் நிலங்கள் இருக்கின்றன. இங்கு கோயில் நிலத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் குடிசைகளை அமைத்தும் வீடுகளை கட்டியும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆக்கிரமிப்பாளர்களா? என்று கேள்வி எழுகிறது.
நிலம் யாருக்கு?
அடியில் இருக்கும் நிலம்தான் சாமிக்கு சொந்தம். மேலே உள்ள கட்டிடம் மக்களுக்கு சொந்தமானது. கோயில் நிலம் என்று சொல்லி, அந்த நிலத்தை அப்படியே விட்டிருந்தால் காடாகத்தான் மாறியிருக்கும். நிலம் காடாக இருந்தால் யாருக்கு பயன்? ஒரு பக்கம் வீடில்லாமல் மக்கள் இருப்பதும், மறுபுறம் அவ்வளவு நிலங்கள் கோயில் பெயரில் இருந்தும், அது சும்மா கிடப்பதும் நியாயம்தானா? என பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
மக்களின் உழைப்பு
கடந்த திமுக ஆட்சியில் கோயில் நிலங்களில் வசிப்போருக்கு விதிக்கப்பட்ட வாடகை குறைக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த ஆட்சியில்.. கோயில் நிலத்தை சாமானிய மக்கள் பயன்படுத்த முடியாதபடி நீதிமன்றம் கறாராக உத்தரவு போட்டுவிட்டது. இதை முதலமைச்சர் விஜய் எப்படி அணுக போகிறார்? பட்டா கிடையாது எனில், காலங்காலமாக சும்மா கிடந்த நிலத்தை பயன்படுத்தி, இன்று நகரங்களாக.. கிராமங்களாக மக்கள் மாற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிலம் சொந்தமில்லையா? என கேள்வி எழுகிறது.
டெல்டா மக்களின் எதிர்பார்ப்பு
பயன்படாமல் இருக்கும் மாற்று நிலத்தை கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலத்தை, அவர்களுக்கு பட்டா செய்து கொடுக்க வேண்டும். பட்டா இல்லாததால், மின் இணைப்பு, சாலை வசதி, குடிநீர் என எந்த அடிப்படை தேவையும் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே நீதிமன்றத்தின் எச்சரிக்கையை புறந்தள்ளிவிட்டு, இது தொடர்பாக சட்டரீதியான வாய்ப்புகளை ஆய்வு செய்து, விஜய் தலைமையிலான அரசு மக்களுக்கு நிலத்தை பட்டா செய்து கொடுக்க வேண்டும் என்று டெல்டா மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
இந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய் வழக்கம்போல அமைதி காக்கிறாரா? அல்லது.. மக்களுக்கு ஆதரவாக செயல்படப்போகிறாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.
நீதிமன்றம் இடிக்கப்படுமா?
கோயில் நிலங்கள் மட்டுமல்லாது நீர்நிலை மற்றும் வனத்துறை நிலங்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கினாலும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மதுரை உலகனேரி பகுதியில் அமைந்திருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, உலகனேரி கண்மாயை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டிருக்கிறது என்பதுதான். சாதாரண மக்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நீதிமன்றம், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றத்தை இடித்து அகற்றுமா? என சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
விஜய் இதை செய்ய வேண்டும்
சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக குடியிருப்பை உருவாக்கிக்கொள்வது ஆக்கிரமிப்பாக மாறாது. பெரும் நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், அமைச்சர்களின் பினாமி பெயர்களின் உள்ள நிலம்தான் ஆக்கிரமிப்பாக இருக்கும். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Click it and Unblock the Notifications
