'லிவிங் டு கெதர்’கைக்குழந்தையுடன் பிலிப்பைன்ஸ் பெண்ணை மணம் முடித்த திருவாரூர் இளைஞர்..சுவாரசிய தகவல்
திருவாரூர்:
பிலிப்பைன்ஸ் நாட்டு காதலியுடன் 'லிவிங் டுகெதர்' வாழ்க்கை வாழ்ந்த திருவாரூரை சேர்ந்த வாலிபர் தனது காதலியை 9 மாத குழந்தையுடன் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடியின் திருமணத்திற்கு வந்த உற்றார் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தியதோடு குழந்தையையும் கொஞ்சி விட்டு சென்றனர்.
நம்ம ஊரில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களில் சிலர், அங்கு தன்னுடன் பணி புரியும் வெளிநாட்டு பெண்களை காதல் செய்து திருமணம் செய்து கொள்கின்றனர். தமிழக கலாசாரத்தை வெளிநாட்டு பெண்கள் பலரும் விரும்புவதால் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்வதையே தமிழக இளைஞர்களை திருமணம் செய்து கொள்கிறவர்கள் விரும்புகிறார்கள். அவ்வப்போது, இதுபோன்ற திருமணங்கள் பெற்றோரிடம் சம்மதத்துடன் மேள தாளங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கூட தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ரஷ்ய பெண்ணிற்கும் தஞ்சையில் தமிழ் கலாசாரப்படி திருமணம் நடைபெற்றது. இது போன்ற திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்க்கும்.
இந்த நிலையில், திருவாரூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு பெண்ணுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்த நிலையில், 9 மாத குழந்தையுடன் இந்த ஜோடிக்கு திருவாரூரில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த தம்பதி சொக்கலிங்கம்- புஷ்ப லதா. இவர்களின் மகன் ரமேஷ் அரவிந்தர் (வயது 33) பிலிப்பைன்ஸில் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே பிலிப்பைன்சில் வேலை செய்து வரும் ரமேஷ் அரவிந்தருக்கும் அதேநாட்டை சேர்ந்த ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ (வயது 22) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளைடைவில் நெருங்கி பழகிய இருவரும் காதலிக்க தொடங்கினர். திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வாழ தொடங்கினர். இந்த ஜோடிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

2 வருடமாக லிவிங் டு கெதர் வாழ்க்கை வந்த இவர்கள், திருமணம் செய்து கொள்ளலாம் முடிவுக்கு வந்தனர். இதையடுத்து தனது காதலி மற்றும் குழந்தையுடன் ரமேஷ் அரவிந்தர் சொந்த ஊருக்கு வந்தார். அவர்களுக்கு எளிய முறையில் திருமணம் செய்து முடித்து வைக்க பெற்றோர்களும் விரும்பினர். இதையடுத்து, ரமேஷ் அரவிந்தருக்கும் அவரது காதலி ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோவுக்கும் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் என்றாலும் மணமகள் தமிழக பெண்கள் போலவே புதுப்பட்டுடுத்தி மணமேடையில் தனது குழந்தையுடன் அமர்ந்து இருந்தார். மணமகன் ரமேஷ் அரவிந்தர் அவருக்கு கெட்டி மேளம் முழங்க கழுத்தில் தாலி கட்டினர். திருமணத்திற்கு வந்த உற்றார்,உறவினர்கள் மணமக்களை வாழ்த்தியதோடு, குழந்தையையும் கொஞ்சி விட்டு சென்றனர்.
இதையடுத்து இருவரும் முறைப்படி திருமணத்தை முத்துப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்தனர். அப்போது அங்கு வந்த பொதுமக்களும் மணமக்களை ஆச்சர்யத்தோடு பார்த்ததோடு மனமார வாழ்த்தி சென்றனர்.
தமிழ்நாட்டிற்கு மருமகளாகயிருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ கூறுகையில், " ரமேஷ் அரவிந்தரை காதலித்து லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்த எனக்கு தமிழ்நாட்டில் இந்துமுறைப்படி திருமணம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடும் இங்குள்ள கலாசாரமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications