திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி டாக்டர் மரணம்
திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக இவரது மருத்துவ அறிக்கைகள், மருத்துவ மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கேரளாவில் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியை தடுக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சிந்து எனும் மருத்துவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்து, அதே திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் போன்றவை இருந்துள்ளது. அதற்கான மருந்துகளை எடுத்து வந்துள்ளார். இருந்தும் காய்ச்சல் குணமாகாத காரணத்தால், நேற்று அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையிலேயே உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலுக்கான சோதனைகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அவற்றில் எதுவுமே இல்லை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இருந்தும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்த வேளையில் இன்று அதிகாலை சிந்து உயிரிழந்துள்ளார். தீவிர காய்ச்சல் காரணமாக பயிற்சி மருத்துவர் உயிரிழந்த விவகாரம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக இவரது மருத்துவ அறிக்கைகள், மருத்துவ மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அங்கு சோதனை முடிவுகள் வெளியான பின்பு தான் சிந்து எவ்வகையான காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் என்ற விவரம் தெரிய வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் தற்போது நிபா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் காய்ச்சல் காரணமாக பயிற்சி மருத்துவர் உயிரிழந்த விவகாரம் பேசிபொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications