Tirupati Reels: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் பிரபலம்! குவியும் கண்டனம்!
திருப்பதி: பிக்பாஸ் புகழ் கீது ராயல், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்திலும், கட் சாலையிலும் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது திருமலை தேவஸ்தானத்தின் விதிமுறைகளை மீறிய செயல் என்பதால், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
கீது ராயல், மேலும் நால்வருடன் இணைந்து திருமலை கட் சாலை மற்றும் ஏழுமலையான் கோயில் வளாகத்தின் முன் நடனமாடி ரீல்ஸ் தயாரித்துள்ளார். 'காட்கம்' திரைப்படத்தில் இடம்பெற்ற "கோவிந்தா, கோவிந்தா" என்ற பாடலுக்கு நடனமாடப்பட்ட இந்த வீடியோவை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ரீல்ஸ் வேகமாகப் பரவியதை அடுத்து அதற்கு கண்டனங்கள் வலுத்தன. இதனால் கீது ராயல் அதை உடனடியாக நீக்கினார்.

திருமலை தேவஸ்தானம் (TTD), திருமலையில் ரீல்ஸ், புகைப்பட ஷூட்கள், அரசியல் உரைகள் ஆகியவற்றுக்குத் தடை விதித்துள்ளது. ஸ்ரீவாரி கோயில் அருகிலுள்ள ஒலிபெருக்கிகள் வழியாக பக்தர்களுக்கு இந்த விதிகள் குறித்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், ஒரு சிலர் இந்த அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஸ்ரீவாரி கோயில் முன்பு அரசியல் கட்சிக்கான பதாகையுடன் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டனர்.
இது சர்ச்சையானதை அடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று TTD தெரிவித்தது. அதேபோல், புதிதாகத் திருமணமான ஒரு ஜோடி கோயில் முன் ஃபோட்டோஷூட் நடத்தியது. அவர்கள் விதிகளை அறியாததால் மன்னிப்புக் கோரி காணொளி வெளியிட்டனர்.
முன்னதாக, ஒஎஸ்ஆர்சி கட்சியின் எம்.எல்.சி. துவ்வாடா ஸ்ரீனிவாஸ் மற்றும் திவ்வெலா மாதுரி மீதும் திருமலையில் புகைப்பட ஷூட் நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
தேவஸ்தானம் பலமுறை எச்சரித்தபோதும், விதிகளை மீறி பலர் ரீல்ஸ், வீடியோக்கள் எடுத்து சர்ச்சையில் சிக்குவது தொடர்கிறது. கீது ராயலின் ரீல்ஸ் விவகாரம் குறித்து தேவஸ்தானத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications