திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்.. கலப்பட நெய் திண்டுக்கல் நிறுவனத்தில் தயாராகலையாம்!
திருப்பதி: திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய், திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம், தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் இருந்து அந்த நெய்யை வாங்கியதாகவும், அங்கு தயாரிக்கப்பட்டதுதான் கலப்பட நெய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

சந்திரபாபுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அடுத்த நாளே ஒரு ஆய்வக பரிசோதனை அறிக்கை வெளியானது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை பரிசோதனை செய்த ஆய்வகத்தின் அறிக்கையின்படி, நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்யும் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தரப்பில், தங்களது தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்தத் தயார் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நெய் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணா புகார் அளித்தார். திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்ததாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் கலப்பட நெய் அனுப்பியதாக திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய், திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம், தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் இருந்து அந்த நெய்யை வாங்கியதாகவும், அங்கு தயாரிக்கப்பட்டதுதான் கலப்பட நெய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கலப்பட நெய் தொடர்பாக, தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி நிறுவனத்துக்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications