திருப்பதி: ஏழுமலையான் கோவில் ஆஸ்தான மண்டப கடையில் தீ விபத்து - 10 கடைகள் எரிந்து சாம்பல்
திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் உள்ள கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அடுத்தடுத்து 10 கடைகளில் தீ பரவியதில் கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. 10 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் தினசரியும் சில ஆயிரம் பேர் வரை மட்டுமே சாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். தங்குவதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை.

கோவிலைச் சுற்றியும் ஏராளமான கடைகள் உள்ளன. ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பக்கத்தில் இருந்த கடைகளுக்கும் பரவியது.
இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்தது. திருமலை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பக்தர்கள் வருகை இன்றி திருப்பதி மலையில் உள்ள வியாபாரிகள் வருமானம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், தீ விபத்துக்கு உள்ளான கடைகளின் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications